`இந்த நெருப்பை எப்படித் தாங்கினாளோ என் புள்ளை' - சுபாவின் தாயார் கதறல் #KuranganiForestFire

``காபியைக்கூட சூடா குடிக்க மாட்டாளே, இந்த நெருப்ப எப்படித் தாங்கினாளோ” என குரங்கணி தீ விபத்தில் உயிரிழந்த திட்டக்குடி பெண்களில் ஒருவரான சுபாவின் தாய் கதறி அழுதார்.

குரங்கணி

போடி அருகே, குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்கள் உட்பட 10 பேர் காட்டுத் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதில், கடலூரைச் சேர்ந்த சுபா என்ற பெண்ணும் ஒருவர். கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர், அ.தி.மு.க-வின் நகர பேரவைச் செயலாளராக இருக்கிறார். இவரது மகன் கமலராஜ், அ.தி.மு.க மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். மேலும், இவர்களுக்குச் சொந்தமாக திட்டக்குடியில் ஃபர்னிச்சர் கடை ஒன்றும் இயங்கிவருகிறது. செல்வராஜுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன். பெரிய மகளுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்துவிட்டது. இளைய மகளான சுபா (28) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

குரங்கணி

அங்கிருந்து தனது நண்பர்களுடன் மலையேற்றப் பயிற்சிக்குச் செல்லும்போதுதான் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். அந்தத் தகவல், சுபாவின் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேனிக்குச் சென்ற செல்வராஜ் மற்றும் உறவினர்கள், சுபாவின் உடலை அடையாளம் காட்டி உறுதிசெய்தனர். அதையடுத்து, சுபாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ”இந்த வருஷம் கல்யாணம் முடிச்சிடலாம்னு ஆசை ஆசையாய் இருந்தோமே... மண்ணை அள்ளிப் போட்டுட்டாளே. காபியைக்கூட சூடா குடிக்க மாட்டாளே... இந்த நெருப்பை எப்படித் தாங்கினாளோ என் புள்ளை” என்று சுபாவின் தாய் கதறினார். சுபாவின் மறைவை அடுத்து, திட்டக்குடி பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!