வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (12/03/2018)

கடைசி தொடர்பு:20:20 (12/03/2018)

'உற்சவ மூர்த்தி சிலையில் வியர்வை வடிகிறதா?!' - கங்கைகொண்ட சோழபுரத்தில் குவியும் மக்கள்

கங்கைகொண்ட சோழபுரத்தில், உற்சவ மூர்த்தி சிலைகளில் இரண்டு நாள்களாகவே தொடர்ந்து வியர்த்துக்கொண்டிருப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் திகைத்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றொரு புறம், அசம்பாவிதம் ஏதும் ஏற்படுமோ  என்றும் அஞ்சுகின்றனர்.

                                கங்கைகொண்ட சோழபுரம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில், மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த 20-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீபிரகன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீபிரகதீஸ்வரர் கோயில், மாமன்னன் ராஜேந்திரசோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றிபெற்றதன் நினைவாக கி.பி.1036-ல் கட்டப்பட்டது. கட்டடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயில், யுனெஸ்கோவால் உலக மரபு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலுக்கு, பல ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது. 85 வருடங்களுக்குப் பின், கடந்த 2017 பிப். 2-ம் தேதி, கும்பாபிஷேமும் நடைபெற்றது. கடந்த 20-ம் தேதி பிரம்மோற்சவ விழா தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்றது. இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சுவாமி வீதிஉலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, 26-ம் தேதி சுவாமிக்கு திருக்கல்யாணம்  செய்யப்பட்டு தேரோட்டமும் நடைபெற்றது. கடந்த 1-ம்தேதி மாசி மக தீர்த்தவாரியும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. 

                                   

 

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக கோயிலில் உள்ள சுவாமி மற்றும் அம்பாள் ஆகிய இரு உற்சவ மூர்த்திகளின் உடல்களில் வியர்வை வெளிவருவதாக அறிந்த பொதுமக்கள், கோயிலுக்குத் திரண்டுசென்று பார்த்தனர். கோயிலில் உள்ள அர்ச்சகர்கள், சாமியின் சிலைகள் மிகவும் குளிர்ந்துள்ளன. அதனால்தான், நீர் வெளியேறி வந்தன எனக் கூறியுள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாக அலுவலர் மற்றும் சிவாச்சாரியார் ராஜூ ஆகியோரிடம் கேட்டபோது, ''கடந்த இரண்டு நாள்களாக அம்பாள் மற்றும் சுவாமி  உடலெங்கும் வியர்த்துக் கொட்டியதாகவும், பாதங்களில் தண்ணீர் சேர்வதாகவும், இரண்டு நாள்களாக அம்பாளின் மூக்கிலிருந்து நீர் வழிந்தோடியது எனவும் அதைத் துணி கொண்டு இரண்டு நாள்களாக துடைத்து வந்ததால் தற்போது நின்றுவிட்டது என்றும் கூறினர். இது அதிசயமான செயல் தான்'' என்று கூறினர்.  இதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் வியப்பில் உள்ளனர். ''உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் அசம்பாவிதம் ஏற்படப்போகிறது. அதற்கான அறிகுறியாக இருக்கலாம்'' என்றும் ஜோதிடர் கருத்து தெரிவிக்கிறார்.