வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (12/03/2018)

கடைசி தொடர்பு:20:40 (12/03/2018)

பிறந்து இரண்டே நாளில் கைவிடப்பட்ட குழந்தை... `பரணி' எனப் பெயர் சூட்டிய கலெக்டர்!

நெல்லையில், பிறந்து இரண்டாவது நாளிலேயே அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தை 110 நாள் சிகிச்சைக்குப் பின்னர் சரணாலம் குழந்தைகள் மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் குழந்தைக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, பரணி எனப் பெயர் சூட்டினார்.

குழந்தை பரணி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்துள்ளது. சராசரி உடல் எடையை விடவும் குறைவான அளவில் இருந்ததால் அதன் உடல் நிலையைக் கவனத்தில் கொண்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு மறுநாளில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ராஜா என்ற பெயரில் ஒருவர் அந்தக் குழந்தையை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

மருத்துவமனையில் ’இங்குபேட்டர்’ வசதியுடன் குழந்தையை  மருத்துவர்கள் பராமரித்து வந்தனர். சீரான மருத்துவத்தால் உடல் எடை அதிகரித்து தற்போது இரண்டரை கிலோ அளவுக்கு வந்ததால், பெற்றோரைத் தேடினார்கள். ஆனால், அந்த குழந்தையை அட்மிட் செய்த ராஜாவைக் காணவில்லை. அத்துடன், அவர் கொடுத்திருந்த முகவரியும் தவறானது என்பது தெரிய வந்ததால், மருத்துவர்கள் குழப்பம் அடைந்தனர். 

அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலரான தேவ் ஆனந்த் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கொண்டு வந்தனர். அந்தக் குழந்தைக்குப் பரணி எனப் பெயர் சூட்டிய ஆட்சியர், குழந்தைகள் இல்லமான சரணாலயத்தில் அனுமதித்து பராமரிக்க உத்தரவிட்டார்.

இது குறித்து குழந்தைகள் நல அலுவலரான தேவ் ஆனந்த் கூறுகையில், ``இந்தக் குழந்தை யாருடையது என்பது தெரியவில்லை. குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்போம். ஒருவேளை குழந்தையின் குறைந்த உடல் எடையைக் கருதி பெற்றோரே விட்டுச் சென்றிருந்தாலும் இப்போது வந்து தக்க ஆதாரத்துடன் தெரிவித்தால் குழந்தையை ஒப்படைப்போம். குழந்தைகள் மையத்தில் வைத்து நாங்கள் இரு மாதங்களுக்குப் பராமரிப்போம். அதன் பின்னரும் பெற்றோர் வராவிட்டால் அரசு விதிமுறைக்கு உட்பட்டு தத்து கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் ஒப்படைப்போம்’’ என்றார்.