வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (12/03/2018)

கடைசி தொடர்பு:21:30 (12/03/2018)

`ராஜீவ் கொலை வழக்கை திரும்ப விசாரிக்க முடியாது!’ - உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ வாதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்பதால், பேரறிவாளனின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ வாதிட்டது. 

உச்ச நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ராஜீவை கொலைசெய்யப் பயன்படுத்திய வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அப்போதைய சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன்,  “2 பேட்டரிகள் எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டன என்பதுகுறித்து தனக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை நான் பதிவு செய்யவில்லை’’ என்று கூறியிருந்தார்.

இந்த வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்த பேரறிவாளன், வெடிகுண்டுகளை உருவாக்கிய இலங்கையைச் சேர்ந்தவரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டு, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில், சி.பி.ஐ தரப்பு வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டன. அதில், ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்பதால், பேரறிவாளன் தாக்கல்செய்த மனுவைத் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.