மகளிர் தினத்தைக் கொண்டாட மகள்களுடன் ட்ரெக்கிங்..! - திருப்பூர் பெண்மணிக்கு நேர்ந்த சோகம் #KuranganiForestFire

மகள்களுடன் சக்திகலா

திருப்பூர் சக்திகலாதேனி மாவட்டம் குரங்கனி தீ விபத்து, தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. ஆர்வத்துடன் கிளம்பி ட்ரெக்கிங் சென்றவர்கள் தீயில் வெந்து மடிந்திருக்கிறார்கள். காட்டிலிருந்து கருகிய உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு  வருகின்றன. தீ விபத்தில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்கூற நம்மிடமும் வார்த்தைகள் இல்லை. இறந்தவர்களைப் பற்றிய நினைவலைகளால் தேம்பி அழுவதைத் தவிர அவர்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.

ட்ரெக்கிங் சென்ற 36 பேரில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 5 பேர். அவர்களில் மூவர் சக்திகலாவும், அவரது 2 மகள்களும். கணவர் சரவணன் லண்டனில் பணியாற்றிக்கொண்டிருக்க, யோகா உடற்பயிற்சி ஆசிரியரான சக்திகலா, தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் திருப்பூரில் வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்துவந்தனர்.

இந்நிலையில்தான், 'சர்வதேச மகளிர் தினத்தை' முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த ட்ரெக்கிங் கிளப் ஒன்று ஒருங்கிணைத்த மலையேற்றப் பயணத்துக்கு, தன் 2 மகள்களையும் அழைத்துச்செல்ல ஆசைப்பட்டிருக்கிறார் சக்திகலா. விடுமுறை தினம் என்பதால், மகள்களும் ஓகே சொல்லிவிட, ஆர்வத்துடன் தேனிக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள்.

2 இளம் தளிர்களும் தன் தாயின் கைவிரல்களைப் பிடித்துக்கொண்டு, அந்தக் கானகத்தில் எப்படியெல்லாம் சுற்றித் திரிந்து மகிழ்ந்திருப்பார்கள். திடீரெனப் பற்றியெரிந்த தீ, இப்போது அந்த குடும்பத்தையே நிலைகுலையச் செய்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரிந்த 
குரங்கணி தீ விபத்திலிருந்து மகள்கள் இருவரும் சிறு காயங்களுடன் தப்பித்துவிட, தாய் சக்திகலா இப்போது 70 சதவிகித தீக்காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தாய் சக்திகலா, சீக்கிரமே எழுந்து வர வேண்டும் என்ற அந்தப் பிஞ்சுகளின் நம்பிக்கை நிறைவேற வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!