வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (12/03/2018)

கடைசி தொடர்பு:22:00 (12/03/2018)

`இன்னும் எத்தனை முறைதான் போராட்டம் நடத்துறதுனு தெரியலை!’ - கொந்தளித்த விவசாயிகள்

``நிலுவையில் உள்ள பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பெற எத்தனையோ போராட்டங்கள் நடத்தியாச்சு. இன்னும் எத்தனை முறை போராட்டம் நடத்துறதுனே தெரியலை”  என கொந்தளித்தனர்,  தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்செய்த விவசாயிகள்.  

விவசாயிகள் போராட்டம்

கடந்த 2016 – 17-ம் ஆண்டிற்கான நிலுவையில் உள்ள பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கிட வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு 150-க்கும் மேற்பட்ட மானாவாரி விவசாயிகள் ஆர்ப்பட்டம் நடத்தினர். ஆர்ப்பட்டத்தில்  பேசிய ம.தி. மு.க., மாநில விவசாய அணி துணைச் செயலாளர் வரதராஜன், “ கடந்த 2016 – 17-ம் ஆண்டுக்கான மானாவாரியில், சாகுபடிக்காக விதைக்கப்பட்ட பாசி, கம்பு, சோளம், மக்காச்சோளம், உளுந்து ஆகிய பயிர்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், நேஷனல் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் நேரடியாகவும் பயிர்க் காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் செலுத்தியுள்ளனர். ஆனால், தற்போது தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பாசி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு மட்டும்தான் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,  இன்ஷூரன்ஸ் கம்பெனியில் நேரடியாகச் செலுத்தி, விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை.

கம்பு, பாசி, உளுந்தி, சூரியகாந்தி, பருத்தி, சோளம், மக்காச்சோளம், மிளகாய் என 8 வகையான பயிர்களை மானாவாரியில் சாகுபடி செய்திருக்கோம். இதில், பாசி, மக்காச்சோளம் மட்டும்தான் பாதிக்கப்பட்ட பயிர்களாகக் கருதி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கம்மூலம் விவசாயிகளுக்கு பணம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பயிர்கள் பாதிக்கப்படவில்லையா?. ஒரே கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குமே வழங்கப்பட்ட காப்பீட்டுத் தொகையில் ஏற்ற இறக்கம் உள்ளது. இதேபோல, அடுத்த கிராமங்களில் வழங்கப்பட்ட தொகையில் வித்தியாசம் அதிகம் உள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான பாதிப்புதான். அப்படி இருக்கும்போது எப்படி காப்பீட்டுத் தொகையில் ஏற்ற இறக்கம் வரும்?.

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் புள்ளியியல் துறைக்கு அளித்த தவறான  தகவல்கள் அடங்கிய அறிக்கையின்படியே, காப்பீட்டுத் தொகை வழங்கியதால், ஏற்ற இறக்கம் மற்றும் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிப்புகளின்  அடிப்படையில் சரியான அறிக்கை அனுப்பி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். இதுவரை, பல போராட்டங்கள் நடத்தி மனுக்களுக்கு மேல் மனுக்களாகத் தொடர்ச்சியாக ஆட்சியரிடம் கொடுத்துவிட்டோம். இதுவரை, விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை முழுமையாகக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் எத்தனை முறை  போராட்டம் நடத்துறதுனே  தெரியவில்லை. இனியும், அரசு காலம் தாழ்த்தினால், விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். விவசாயிகளின் பிரச்னைகள் தினசரி பிரச்னையாகிவிட்டது” என்றார் வேதனையுடன்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க