வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (13/03/2018)

கடைசி தொடர்பு:01:00 (13/03/2018)

'குரங்கணி விபத்தை வைத்து நியூட்ரினோ பணிகளை ஆரம்பித்துவிடுவார்கள்'! - எச்சரிக்கும் சீமான்

குரங்கணி தீ விபத்தை முன்னிறுத்தி, காட்டுப் பகுதிக்குள் யாரையும் செல்லவிடாமல் தடுத்து, நியூட்ரினோ பணிகளை ஆரம்பித்து விடுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

சீமான்

தேனி மாவட்டம், குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் கருகி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிவருகின்றனர். இந்நிலையில், கோவை வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``குரங்கணி மலையேற்றத்திற்கு அனுமதி இல்லாமல் உள்ளே சென்றார்கள் என்றால், வனத்துறையில் சோதனை செய்ய ஆட்களே இல்லையா? தமிழக அரசின் பதில் பொறுப்பற்றது. 

இயற்கையாக தீப்பற்றினால்,  அணைப்பதற்கான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லையா? பேரிடர் ஏற்படும் போதெல்லாம் இதேபோல்தான் நடவடிக்கைகள் இருக்கின்றன. குரங்கணி தீ விபத்தை முன்னிறுத்தி, காட்டுப் பகுதிக்குள் யாரையும் செல்லவிடாமல் தடுத்து, நியூட்ரினோ பணிகளை ஆரம்பித்துவிடுவார்கள். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும்வரை, தமிழக அரசுக்கு ஆபத்து இல்லை" என்றார். பல விஷயங்களில் ரஜினி கருத்து கூற மறுப்பதுகுறித்து கேட்ட கேள்விக்கு,  "அவர் அப்படித்தான் நழுவிப் போவார். போராடவும் வர மாட்டார்... அறிக்கை விடவும் மாட்டார்.. நேரடியாக முதல்வர் பதவிக்குதான் ஆசைப்படுகிறார்" என்றும் கூறினார்.