வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (12/03/2018)

கடைசி தொடர்பு:23:00 (12/03/2018)

'மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற 2,000 மீனவர்கள் கதி என்ன?' -உறவினர்கள் கவலை!

வங்கக் கடலில் மையம்கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் ஆபத்து இருக்கும் நிலையில், ஆழ்கடல் மீன் பிடிப்புக்காகச் சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 2000 பேர் இன்னும் கரை திரும்பாததால், அவர்களின் உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர். 

மீனவர்கள் கதி என்ன?

குமரி மாவட்டத்தைப் புரட்டிப்போட்ட ஒகி புயலின் பாதிப்பு ஏற்பட்டு 100 நாள்களே ஆன நிலையில், மீண்டும் அதேபோன்ற பாதிப்பு ஏற்படுமோ என்கிற அச்சத்துடன் குமரி மாவட்ட மீனவர்கள் உள்ளார்கள். தற்போது, தென் மேற்கு வங்கக்கடலில் மையம்கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுவடைந்து, தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறியிருக்கிறது. இதனால், கடலோரப் பகுதியில் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. சில இடங்களில் மழைபெய்துவருகிறது. 

இந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறும் ஆபத்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகச் சென்றவர்கள், ஏற்கெனவே கடலுக்குள் சென்று அங்கேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு, புயல் எச்சரிக்கை எதுவும் தெரியாது. அவர்களை செல்போனில் தொடர்புகொள்ள முடியாது. அதனால், அவர்கள் நிலைமையின் விபரீதம் தெரியாமல் கடலுக்குளேயே இருக்கிறார்கள். 

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 200 விசைப்படகுகள், ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகச் சென்று இன்னும் கரை திரும்பவில்லை. அதில், 2,000-க்கும் அதிகமான மீனவர்கள் இருக்கக்கூடும் என்பதால், அவர்களின் உறவினர்கள் அச்சத்தில் உறைந்துபோய் உள்ளனர். இதனிடையே சில விசைப்படகுகள் கரைக்கு வந்தபடியே இருக்கின்றன. சில படகுகள் கேரள எல்லையில் கரை சேர்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளன. எஞ்சிய மீனவர்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது. 

குமரி மாவட்ட கிராமங்களிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றவர்களின் பட்டியலை மீனவளத்துறை கணக்கெடுத்துவருகிறது. அவர்களில் இதுவரை திரும்பாதவர்கள்குறித்தும் கணக்கெடுத்துவருவதால், மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால், தங்களின் உறவினர்களின் நிலை என்ன? என்பது தெரியாமல் மீனவ மக்கள் கவலை அடைந்துள்ளனர். கடலுக்குள் இருக்கும் மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை கொடுத்து கரை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குமரி மாவட்ட மீனவ மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. கடற்படை மற்றும் விமானங்கள் மூலமாக ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கும் விசைப்படகுகளைத் தொடர்பு கொண்டு, கரை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, கடற்படையினரும் கடலோர காவல்படையினரும் கடல் பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள்.