`கடத்திச் செல்லப்பட்ட அக்கா மகளை மீட்டுத் தாருங்கள்!’ - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி

கடத்திச் செல்லப்பட்டத் தனது அக்கா மகளை மீட்டுத் தரக்கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூலித் தொழிலாளி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை போலீஸார் தடுத்து அழைத்து சென்றனர்.

ராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற கூலி தொழிலாளி

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவுக்கு உட்பட்ட பெரும்பேர் கண்டிகை கிராமத்தை சேர்ந்த ஆதிகேசவனின் மகன் ஏழுமலை(59). இவரது அக்கா இந்திராணிக்கு மனநிலை சரியில்லாமல் போனதால் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவுக்கு பிரார்த்தனை செய்ய வந்துள்ளனர். இந்திராணி குணமடைய வேண்டும் எனில் ஏர்வாடியிலேயே தங்கி இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டதால் ஏழுமலையும்,அக்கா குடும்பத்தினரும் ஏர்வாடியில் தங்கியிருந்துள்ளனர். ஏழுமலை ஏர்வாடி தர்கா பகுதியில் ஒரு உணவகத்தில் கூலித் தொழிலாளியாக பணி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அக்கா இந்திராணியின் மகள் நர்மதாவை காஞ்சிபுரத்தில் உள்ள சில பிரமுகர்களின் தூண்டுதலால் ஏர்வாடியை சேர்ந்த சிலர் சொத்துப் பிரச்சினைக்காக கடத்திச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. கடத்தி செல்லப்பட்ட  நர்மதாவைக் கண்டுபிடித்துத் தருமாறு 7 முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும், அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. எனவே அக்கா மகளை கண்டுபிடித்துத் தருமாறு ஆட்சியரிடம் மீண்டும் மனுக் கொடுக்க வந்திருந்தபோது மனமுடைந்த ஏழுமலை, தீடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.  இதனைக் கண்ட  அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளை கணேச பாண்டியன் ஏழுமலையை மீட்டு கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!