வெளியிடப்பட்ட நேரம்: 02:01 (13/03/2018)

கடைசி தொடர்பு:02:01 (13/03/2018)

தமிழ்நாட்டில் வாழ்கிறோமா, குஜராத்தில வாழ்கிறோமா? தேவாலயத் தாக்குதலுக்கு வைகோ கண்டனம்

அலைபேசியில் வந்த காணொளியைப் பார்த்தேன். இது நடப்பது தமிழ்நாட்டிலா? அல்லது குஜராத்திலா? என்ற கவலையும், அச்சமும் ஏற்பட்டது என்று மதுரை சிக்கந்தர் சாவடியில் தாக்குதலுக்கு உள்ளான கிறிஸ்துவ வழிபாட்டு தலங்களை பார்வையிட வந்த வைகோ, தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் வாழ்கிறோமா

அவர் மேலும் பேசும்போது, ''ஜெபக்கூடம் நடத்த வசதி இல்லாதவர்கள், சாதாரண ஓட்டு வீடுகளில் வழிபாட்டுக் கூட்டங்களை நடத்துவார்கள். யாரையும் வற்புறுத்துவது இல்லை, மதம் மாறும்படி அழைப்பதும் இல்லை. வாழ்க்கையில் வேதனைப்படுகிறவர்கள் அங்கே செல்கிறார்கள். அங்கே வெறுப்பைப் போதிப்பது இல்லை. வலது கன்னத்தில் அடித்தால், இடது கன்னத்தையும் காட்டும் வகையில் அமைதியாக வழிபாடு செய்கிறார்கள். ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே தென்பாண்டி மண்டலத்தில் தேவாலயங்கள் கட்டுவதற்கு மன்னர்கள் உதவி செய்தார்கள். மீனாட்சி அம்மனை இலட்சக்கணக்கான மக்கள் வழிபடுகின்றார்கள். அதுபோல இஸ்லாமிய சகோதரர்கள் வெள்ளிக்கிழமை அன்று மசூதிகளில் அமைதியாக வழிபடுகிறார்கள். கிறித்துவர்கள் மிக அமைதியாக,  சக மனிதனின் கண்ணீரைத் துடைப்பதற்காக, பிரார்த்தனை செய்கிறார்கள். ரவிஜேக்கப் என்ற பாதிரியாரும், அவரது துணைவியார் சகோதரி பெல்சியாவும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 

இந்து அமைப்பை சேர்ந்த ஒருவர், பாதிரியாரை மிகவும் இழிவாக பேசி கொளுத்தி விடுவோம் என்றும் கொலை மிரட்டல் விடுகிறார். இந்த காட்சி வாட்ஸ்அப்பில் பரவிக்கொண்டிருக்கிறது. இதில் வேதனை என்னவென்றால், மிரட்டல் விடுத்த அந்த இந்து அமைப்பை சேர்ந்தவருக்கு காவலர் ஒருவர் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறார். எந்த அடிப்படையில் இவர்களுக்குக் காவல்துறை பாதுகாப்பு அளிக்கிறீர்கள் என்று தமிழ்நாடு அரசைக் கேட்கிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்தான் ஆபத்து இருக்கிறது. எல்லோருக்கும் பாதுகாப்பு கொடுக்கின்றீர்களா? இரண்டு டி.எஸ்.பிக்களையும், காவலர்களையும் பிரதமர் மன்மோகன்சிங் என் வீட்டு பாதுகாப்புக்காக அனுப்பி வைத்தபோது, நான் மக்களோடு இருப்பவன், எந்தப் பாதுகாப்பும் தேவை இல்லை என்று அனுப்பி வைத்தவன் நான். 

மதுரையில் மேலும் நான்கு தேவாலயங்களுக்குச் சென்று போதகர்களை மிரட்டி இருக்கிறார்கள். இந்த வட்டாரத்தில் பல  தேவாலயங்களைத் தகர்க்கப் போகிறோம் என்றும் மிரட்டியிக்கிறார்கள். ஒலிபெருக்கியை உடைத்து இருக்கிறார்கள். இங்கே உளவுத்துறை அதிகாரிகளும் வந்திருக்கிறார்கள். இதைப்பற்றி உங்கள் ஆணையரிடம் சொல்லுங்கள். இந்தச் சம்பவத்துக்கு எப்.ஐ.ஆர் போட்டு இருக்கிறார்களா? இல்லையா? என்று கேளுங்கள். இந்து, முஸ்லிம், கிறித்து என எந்த வழிபாட்டு இடங்களுக்கு செல்கிறவர்கள்   மீது யாரும் தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம்' என்று கடுமையாக பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க