உஷா கர்ப்பிணி இல்லை வைரலாகும் மருத்துவ அறிக்கையால் பரபரப்பு..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த உஷா, கர்ப்பிணி இல்லை என்று வைரலாகும் மருத்துவ அறிக்கையால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உஷாதிருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதியை விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர், இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார். வண்டியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண் உஷா தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உஷா பலியானார்.

இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. பலியான உஷாவுக்காக திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பலமணிநேரம் நடந்த சாலைமறியலால், போக்குவரத்து ஸ்தமித்துப் போக, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதில் சுமார் 24பேர் மீது வழக்குப் பதிவுச் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக போக்குவரத்து இன்ஸ்பக்டர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் திருச்சி மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.உஷா மரண பிரேதபரிசோதனை அறிக்கை

மேலும் பலியான உஷாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர் சரவணன் என்பவரது தலைமையிலான மருத்துவக்குழு தலைமையில் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு, கடந்த 8-ம் தேதி மாலை உஷாவின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த நாள் காலை உஷாவின் உடல் திருச்சி காஜாமலையில் உள்ள கல்லரைத்தோட்டத்தில் உடல்அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த உஷா வழக்கை விசாரித்திட, டி.எஸ்.பி புகழேந்தி விசாரனை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து போலீஸார், விபத்து குறித்து விசாரித்து வருவதுடன், அதற்கான ஆதாரங்களை தேடியும் வருக்கின்றனர்.

இந்நிலையில், உஷா இறந்த அன்றே, போலீஸார், உஷா கர்ப்பிணி இல்லை என்றும், அவரது வயிற்றில் இருந்தது கட்டி என்றும் தெரிவித்துவந்தனர். இதனால் திருச்சியில் பெரும்பரபரப்பு நிலவி வந்த நிலையில், உஷாவின் உடலை பிரேத பரிசீதனை செய்த மருத்துவர் சரவணன், அந்த பரிசோதனை அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த திருச்சி எஸ்.பி, உஷாவின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் சரவணன் வழங்கிய அறிக்கைக் குறித்து பேட்டியளித்தவர், பிரேதப் பரிசோதனையில் அன்று பலியான உஷா கர்ப்பிணி இல்லை எனத் தெரியவந்துள்ளது. மாறாக அவரது வயிற்றில் சிறியளவில் கட்டி இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கட்டி குழந்தைக்கான கட்டியில்லை” எனக் கூறினார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “உஷா மற்றும் ராஜா முதன்முதலில் துவாக்குடி அரசு மருத்துவமனையில்தான் அனுமதிப்பட்டனர். "ராஜா அன்று விபத்தில் சிக்கி மனைவியுடன் அனுமதிக்கப்பட்டபோது அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தாரே தவிர அவர், குடிபோதையில் இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது உஷா கர்ப்பமாக இருந்தார் என்று எங்களிடம் கூறவில்லை என்றார். இந்நிலையில்தான் இப்படியான ஒரு பரிசோதனை அறிக்கை வெளியே வந்துள்ளது.

இதுகுறித்து உஷாவின் கணவர் ராஜா, “கல்யாணம் ஆனதில் இருந்து எங்களுக்கு குழந்தை இல்லை என்பதால் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தோம். கடந்த சில மாதங்களாக தான் கர்ப்பமாக இருப்பதாக உஷா என்னிடம் கூறிவந்தாள். அதனால் அவருக்கு தேவையானவற்றை செய்துக் கொடுத்து வந்தேன். இந்நிலையில் மருத்துவர்கள், உஷா கர்ப்பிணி இல்லை என பரிசோதனை அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறுகிறார்கள். நாங்க என்னத்தைக் கண்டோம். அவளையே பறிக்கொடுத்துட்டு கிடக்கிறோம். இந்த போலீஸ்காரங்க, எதை வேண்டுமானாலும் மாத்தி மாத்தி சொல்லுவாங்க. அவங்கக்கிட்ட அதிகாரம் இருக்கு. எதைவேண்டுமானாலும் இட்டுக்கட்டி கூறுவார்கள். என் உஷாவை அவங்களால் திருப்பித் தரமுடியுமா?” என்றார் சலிப்புடன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!