வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (13/03/2018)

கடைசி தொடர்பு:10:24 (13/03/2018)

சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு!

சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, தகுந்த பாதுகாப்பு வழங்கக்கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள்  மனு அளித்தனர்.

திருநங்கைகள்

நெல்லையில் உள்ள திருநங்கைகள், குடியிருக்க இடம் இல்லாமல் தடுமாறியதுடன், அவர்களுக்கு குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்கள் வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்ததால், தங்க இடம் இன்றித் தவித்துவந்தனர். இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்ததால், நெல்லையை அடுத்த நரசிங்கநல்லூர் கிராமத்தில் திருநங்கைகளுக்காக 30 இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

அங்கு வசிப்பவர்கள், கிராமிய நடனங்கள் உள்ளிட்ட தொழில்செய்து பிழைத்துவருகிறார்கள். ஆனால், நெல்லையின் பிரதான இடங்களான பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், சில திருநங்கைகளும் திருநங்கைகளைப் போன்று வேடமணிந்த நபர்களும் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறித்துவருகிறார்கள். அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்பாவிகளிடம் பணம் பறிப்பதால், அவர்களைத் தேடி சிலர் திருநங்கைகளின் வசிப்பிடத்துக்குச் சென்று தகராறு செய்யும் நிலைமையும் உள்ளது. 

அத்துடன், சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்தவர்களும் தங்களின் வீடுகளுக்கு வந்து மிரட்டல் விடுப்பதாக திருநங்கைகள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக, ஏற்கெனவே இரு முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று மீண்டும் மனு அளிக்க வந்தனர். இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கண்ணீர் மல்க அவர்கள் முறையிட்டனர். அவர்களின் மனுவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பிய மாவட்ட ஆட்சியர்,  மனுமீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, திருநங்கைகள் மகிழ்ச்சியுடன் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.