சரள்மண் கொள்ளையைத் தடுக்காத அரசைக் கண்டித்து காதில் பூ சுற்றி நூதன போராட்டம்..!

ஊரணியில் சரள் மண் கொள்ளையடுக்கப்படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம் ஓனமாக்குளம் கிராமத்தினர் காதில் பூ சுற்றிக்கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகில் உள்ளது, ஓனமாக்குளம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஊரணியில் இருந்து, தனியார் காற்றாலைக்கு அனுமதி இல்லாமல் வெள்ளைச் சரள்மண் அள்ளப்பட்டுவருவதாகவும், இதுகுறித்து பல முறை மனு அளித்தும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால், காதில் பூ சுற்றி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு தலைவர் அய்யலுசாமியிடம் பேசினோம், “ஓனமாக்குளம் கிராமத்தில் உள்ள ஊருக்குப் பொதுவான 5 ஏக்கர் பரப்பளவுடைய ஊரணி உள்ளது. இந்த ஊரணியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு ரோடு போடுவதற்காக, கடந்த 2 மாதங்களாக, திருட்டுத்தனமாக லாரிகளில் வெள்ளைச் சரள்மண் அள்ளப்பட்டுவருகிறது. இதனால், அப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வி.ஏ.ஓ-விடம் புகார் அளித்தோம். 'கரம்பை மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக'க் கூறினார். ஆனால், வெள்ளை சரள் மண்ணைதான் லாரிகளில் அள்ளிச் சென்றனர். உடனே சரள் மண்ணுடன் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டோம்'' என்றார்.  

ஆட்சியர் இந்த ஊரணியைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் பல முறை மனு அளித்தோம். தொடர்ந்து, கண்ணில் கறுப்புத்துணி கட்டி போராட்டம், வாயில் துணி கட்டி போராட்டம், முகத்தை வெள்ளைத் துணியால் மூடி போராட்டம், ஊரணி அருகில் உள்ள ஆலமரத்தில் கயிறு கட்டித் தலைகீழாகத் தொங்கியபடி போராட்டம் எனப் பல போராட்டங்கள் நடத்தினோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த ஊரணியில்  இருந்து சரள் அள்ளுவதை நிறுத்திட ஆட்சியர் இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். ஆட்சியரையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்துதான் காதுகளில் பூ சுற்றி இப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.” என்றார்.

''காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம் நடத்துவது மதவழிபாட்டுமுறை என்பதால், போராட்டத்தை அனுமதிக்க முடியாது” என காவல்துறையினர் சொல்ல, காதுகளிலிருந்து பூக்களை எடுத்துவிட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!