பிரம்பு மரச்சாமான்களைத் தயார்செய்து விற்கும் பழங்குடியினர்..!

நீலகிரி மாவட்டம் குன்னுரை அடுத்துள்ள நொன்சுச் எஸ்டேட் அருகே உள்ள செங்கல்பூட்டூரில், சுமார் 20 பழங்குடி இன குடும்பத்தினர், தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரம்பு மரச் சாமான்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். 

அல்லு குரும்பர் பழங்குடி இனத்தைச் சார்ந்த சமூகத்தினர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருந்த தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்வதைப் பிரதானமாக வைத்திருந்தனர். அதன்மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து, குடும்பத்தை நடத்துவது பெரும் சவாலாக இருந்தது. இதனால், பெரும்பாலான பழங்குடியினர் அரசு வழங்கும் ரேஷன் பொருள்களை  எதிர்பார்க்க வேண்டியிருந்தது. 

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, குன்னூரை அடுத்த செங்கல்பூட்டூர் பகுதியில் உள்ள பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை உயர்த்த, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் முயற்சித்தனர். அதன்மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில கைவினைக் கலைஞர்கள் உதவியுடன், பிரம்பு நாற்காலிகள், டீபாய்கள், டேபிள், ஊஞ்சல் உள்ளிட்ட மரச் சாமான்களைச் செய்ய பழங்குடியினருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. தற்போது, அவர்கள் தயார்செய்யும் பிரம்பாலான பொருள்கள், குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. 

இதுகுறித்து, கைவினைப் பொருள்களை உற்பத்திசெய்ய கற்றுக்கொண்ட பழங்குடியினர்களுள் ஒருவரான ரமேஷ் கூறுகையில், 'பிரம்பாலான மரச் சாமான்களைத் தயார்செய்வதற்கான பிரம்புகளை, நாங்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள காடுகளிலி ருந்து எடுத்துவருகிறோம். நன்கு வளர்ந்து முதிர்ந்த பிரம்புகளை மட்டும்தான் வெட்டுவோம். இளம் தளிர்களை வெட்டுவதில்லை. அதே போல, மழைக் காலத்திலும்  பிரம்புகளை வெட்ட மாட்டோம். மேலும், நாங்கள் தயார்செய்யும், பிரம்புப் பொருள்களை ரூ. 20 முதல், ரூ 10 ஆயிரம் வரை, அதில் உள்ள வேலைக்கு ஏற்ப விற்பனைசெய்கிறோம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!