ரஜினி, கமல் நம்முன் உள்ள எதிரிகள்..! சுப.வீரபாண்டியன் பேச்சு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வடக்கு ஒன்றிய தி.மு.க மற்றும் இலுப்பூர் தி.மு.க சார்பில் ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும்  இளைஞர் எழுச்சி நாள் பொதுகூட்டம் இலுப்பூர் சின்னக்கடை வீதியில் நேற்று இரவு நடைபெற்றது.

கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், 'தமிழக முதல்வர் 'காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம்' அமைக்க வலியுறுத்தும் விதமாக எதிர்கட்சித் தலைவரை நேரில் அழைத்துப் பேசியது பாராட்டக்கூடியதாகும். அதேசமயம், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் தமிழக நலன்களைச் சிந்திப்பதை விட, ஆட்சியைக் காப்பாற்றுவது, அதிகாரங்களைப் பகிர்வது, எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துக்கொள்வது, மத்திய அரசிடம் நெளிவு சுழிவாக நடந்துகொள்வது போன்ற காரியங்களில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள்.

தற்போதுள்ள தமிழக அமைச்சர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற நிலைமையில் தமிழ்நாடு இருப்பது சாபக்கேடு. தமிழக மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், முதலில் குரல் கொடுப்பவராக மு.க.ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார். பெரியார், 'கடவுளை நம்பாதவனை கோயிலுக்குப் போகவேண்டாமென்றும், நம்புகிறவனை கோயிலுக்குச் செல்' என்றும் கூறினார். அடித்தட்டு மக்களை கோயிலுக்குக் கூட்டிச் சென்றவர்தான் பெரியார். 99 சதவிகிதம் மத நம்பிக்கையும் அதைச் சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களும் கொண்ட தமிழக மக்கள், கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியாரை 90-சதவிகிதம் பேர் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். அவரின் சிலையை உடைப்போம் எனக்கூறி, ஹெச்.ராஜா நம்மையெல்லாம் எழுச்சிபெறச் செய்துள்ளார்.

அவருக்கு நன்றி. சிலையை உடைப்பது நடக்கும் விஷயமல்ல என்பது அவருக்கும் தெரியும். பெரியாரின் சிலையை உடைத்தால், உடைப்பவன் கையை வெட்டுவேன் என்று  குரல் கொடுத்த வைகோவைப் பாராட்டுகிறேன். இந்துக்கள் தி.மு.க-வுக்கு எதிரிகளல்ல. பூணூல் போடுபவர்கள் மட்டும்தான் தி.மு.க-வுக்கு எதிரிகள். தலைவன் பதவிக்கு வெற்றிடம் இருப்பதாகக் கூறி, கமல், ரஜினி, தினகரன் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் நம்முன் உள்ள எதிரிகள். அவர்களைப் போல, 30-பேர் வந்தாலும் தி.மு.க-வுக்கு உள்ள வெற்றி வாய்ப்பை யாரும் தடுக்க முடியாது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்தான்' என்று சுப. வீரபாண்டியன் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!