குரங்கணி தீவிபத்து - ஆறுதல் சொல்ல வந்த முதல்வருக்கு அரசு விழாபோல வரவேற்பு

வனத்துறையினர் அனுமதி கொடுக்காத வழித்தடம் வழியாக மலையேற்றத்துக்குச் சென்றதால்தான் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று வனத்துறையினரைக் காப்பற்றும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மதுரையில் தெரிவித்துள்ளனர். 


தேனி மாவட்டம் குரங்கணி மலைக்கு ட்ரெக்கிங் சென்ற சென்னை, கோவை, சேலத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு சில நாள்களாக பற்றி எரிந்துகொண்டிருந்த காட்டுத்தீயில் சிக்கினர். அதில், 10 நபர்கள் உயிரிழந்தனர். 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், மதுரை ராஜாஜி மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

குரங்கணி தீ விபத்து

கடந்த சில நாள்களாக காடு தீப்பற்றி எரியக் காரணம் என்ன?  அதை அணைக்க முயற்சி எடுக்காதது ஏன்? காடு எரிகின்ற நிலையில் ட்ரெக்கிங் செல்ல வனத்துறை அனுமதித்தது ஏன்? என்ற பல கேள்விகள் எழும்பியுள்ள நிலையில், காயம்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேற்று மாலை மதுரைக்கு வந்தார்கள். 
நடந்துள்ள சம்பவம் பெரும் துயரம் என்பதை மறந்து, அரசு விழாவுக்கு ஏற்பாடுசெய்வதுபோல,  மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அதிகாரிகள் செய்திருந்தார்கள். மருத்துவமனைக்குள் உள்ள வழிகளை அடைத்து, கடுமையான போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள்.

இதனால், அங்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், நான்கு மணி நேரம் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். போர்ட்டிகோவிலிருந்து முதல் தளத்திலுள்ள தீக்காயப் பிரிவு வரை கார்பெட் விரித்திருந்தார்கள். ரூம் ஸ்பிரே அடித்து மருத்துவமனை மருந்து வாசத்தை மறைத்து, கமகமக்க வைத்திருந்தார்கள். காயம்பட்டவர்களுக்கு வழங்க லேமினேட் செய்யப்பட்ட பழக்கூடைகளைத் தயார்செய்திருந்தார்கள். முதலமைச்சர் வரும் வரை டீன் ரூமில் அமர்ந்திருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அருகிலிருந்த அதிகாரிகள், கட்சிக்காரர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். பாதுகாப்பு என்ற பெயரில் வந்திருந்த சிறப்பு பாதுகாப்புக் காவலர்கள், டாக்டர்கள் முதல் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரையும் துரத்திக்கொண்டிருந்தனர். எம்.எல்.ஏ-க்களைக்கூட முதல்வர் அருகே விடவில்லை. அவர்களுக்குத் தெரிந்தவர்களை மட்டும் முதல்வருடன் அனுமதித்தனர். 

எடப்பாடி பழனிச்சாமி

முதலில் காயம்பட்டவர்களையும், அடுத்ததாக அவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வரும் துணைமுதல்வரும் சிறிதுநேரம் அங்கிருந்துவிட்டு கீழே செய்தியாளர்களைச் சந்திக்க வந்தனர். 'வனத்துறையினரிடம் அனுமதிபெற்று மலையேற்றப் பயிற்சிக்கு செல்லக்கூடிய வழியில் செல்லாமல், வனத்துறையினர் அனுமதி மறுக்கும் வழித்தடம் வழியாக மலையேற்றப் பயிற்சிக்கு சென்றதால்தான் இந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.  காயமுற்றவர்களுக்கு அனைத்து விதமான உயர் சிகிச்சையும் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  மலையில் தீ எரியும்போது இவ்வளவு பேரை வனத்துறையினர் எப்படி அனுமதித்தார்கள்.   வனத்துறையினர் பணம்பெற்று அனுமதி வழங்கினார்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார்கள். அங்கிருந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் பார்த்துவிட்டு, சென்னைக்குக் கிளம்பினார்கள். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!