பேனர் விவகாரம்..! தலைமைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம்..!

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சமூக ஆர்வலர் பாத்திமா மனு ஒன்றை அளித்தார். அதில், "பொது இடங்களில் பேனர் வைப்பதில் குறிப்பாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் அதிக அளவு விதி மீறல் நடந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளையும் அறிவறுத்தல்களையும் கூறியிருந்தும், அதை உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தாத, மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்மீது உரிய  நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறிருந்தார். 

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'அனுமதி இன்றி பேனர் வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் அதை நடைமுறைப்படுத்தாதது ஏன்? 
அனுமதி இன்றி குறிப்பிட்ட இடங்களில் பேனர் வைப்பதால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. இதை எல்லாம் கண்டுகொள்ளமால் இருப்பது ஏன்? உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப்பது ஏன்? எனப் பல கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். மேலும், 'அனுமதி இன்றி பேனர் வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதை அமல்படுத்தாத, தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர், நகராட்சி செயலாளர் ஆகியோர்மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இதுவரை இதுகுறித்து எத்தனை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டது என்பதுகுறித்து விரிவான பதில் மனுவும் தாக்கல்செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!