வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (13/03/2018)

கடைசி தொடர்பு:18:40 (13/03/2018)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு சி.பி.எம் கூட்டத்தில் தீர்மானம்

சென்னையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநில குழுக் கூட்டம்,  மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சமகாலத்தில் தமிழக மக்களை அதிகமாக பாதித்துவரும் பிரச்னைகளை  மையமாக வைத்து மூன்று முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

காவிரி டெல்டா பகுதியில் அதிகமான சதுர கி.மீ பரப்பளவில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதைத் திரும்பப் பெறவேண்டும். மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை காவிரி வடிநிலப் பகுதியாக அறிவிக்கப்பட்டு, நிலத்தடி எரிபொருள் வள இருப்பு மண்டலமாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில், இவற்றில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளிக்கப்படலாம். தனித்தனி உரிமம் என்பதை மாற்றி, ஒரு உரிமம் மூலம் ஹைட்ரோ கார்பன்களையும் எடுக்கும் வகையில் புதிய திருத்தத்தை மத்தியஅரசு கொண்டுவந்துள்ளது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால், சுற்றுச்சூழல் பாதிப்பும் காவிரி டெல்டா பகுதிகள் வறட்சி அடையும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ஆபத்தான திட்டத்தை எதிர்த்து அனைத்து  மக்களும் போராட முன்வர வேண்டும்.

சிபிஎம் மாநில செயற்குழு

நாடு  முழுவதும் உலகப் பெண்கள் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றுவரும் சூழலில், சென்னை மீனாட்சி கல்லூரியில் மாணவி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. சமீபகாலமாக தமிழகம் முழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், பாலியல் சீண்டல்கள்  அதிகரித்துவருகின்றன. பல மாணவிகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதும், மர்ம மரணங்களும் நிகழ்ந்துவருகின்றன. பல வழக்குகளில் பாதிக்கப்படும் மாணவிகள், புகார்கள் கொடுத்தாலும் காவல்துறை அலட்சியப்படுத்துவதாலும் இதுபோன்ற வன்முறைகள் அதிகரிக்கின்றன. வளர் இளம் பருவத்தினர் மத்தியில் எற்படும் மனநிலை மாற்றங்கள்குறித்து விழிப்பு உணர்வு பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுவெளியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மாநில அரசு கூடுதல் பொறுப்பெடுத்து குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

கடந்த சில மாதங்களாக தமிழக காவல்துறை, பொது மக்கள்மீதும், போராட்டங்கள் நடத்துகிற மக்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குவது, பொய் வழக்குப் போடுவது அதிகரித்துள்ளது. பேருந்துக் கட்டண உயர்வு, நீட் தேர்வு எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களை நடத்தியவர்கள்மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவருகிறது. பெண்களும், குழந்தைகளும் காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள். காவல்துறையினரே வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதும் மக்கள் கண்ட உண்மை. இரண்டு தினங்களுக்கு முன், திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், கர்ப்பிணிப் பெண் உஷாவை உதைத்துத் தள்ளி கொலைசெய்தது, மனிதத்தன்மையற்ற செயல் ஆகும். காவல்துறையின் அராஜகத்தைத் தடுத்து நிறுத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தீவிர போராட்டங்களை முன்னெடுக்கும். என்கிற மூன்று தீர்மானங்களை இன்று நிறைவேற்றியுள்ளார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க