ஊழல் புகாரால் வங்கிக்குள் அதிரடியாகச் சென்று கிரண்பேடி ஆய்வு!- அதிர்ந்துபோன ஊழியர்கள்

புதுச்சேரி கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் நடப்பதுகுறித்து விசாரணைசெய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.

கிரண்பேடி

புதுச்சேரி கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் 100 அடி சாலையில் இயங்கிவருகிறது. வங்கி கொடுத்த கடன்களை வசூலிப்பதில் முறைகேடுகள் நடப்பதுகுறித்தும், ஊழியர்கள் பணிபுரியாமல் மெத்தனமாக இருப்பதுகுறித்தும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு பல்வேறு புகார்கள் சென்றன. அதனடிப்படையில், நேற்று (12/03/2018) அதிரடியாக வங்கிக்குள் சென்ற கிரண்பேடி, அங்கிருந்த ஆவணங்களை ஆய்வுசெய்தார். வங்கி அதிகாரிகள், ஊழியர்களிடம் வங்கியில் ஏற்பட்டுள்ள நஷ்டம், முறைகேடுகள், கையாடல் மற்றும் வங்கி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதையடுத்து, வங்கியின் 3-வது தளத்திலுள்ள கருத்தரங்கக் கூடத்துக்கு வங்கி அதிகாரிகளையும் ஊழியர்களையும் அழைத்தார். அப்போது அவர்களிடம், இதுவரை வங்கிக்கு வரவேண்டிய வாராக்கடன் எவ்வளவு? கொடுக்கப்பட்ட கடனை முறைப்படி ஏன் வசூலிக்கவில்லை? அதற்கான காரணம் என்ன? யார் யாருக்கெல்லாம் கடன் வழங்கப்பட்டுள்ளது? வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு எதனடிப்படையில் கடன் வழங்கப்பட்டது? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, அதற்கான விடைகளை எழுதி வாங்கிக்கொண்டார்.

கிரண்பேடி

அதையடுத்து, அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டுறவு வங்கிகளில் தகுதிவாய்ந்த ஊழியர்கள் பணியாற்றவில்லை. இங்கு பணிபுரியும் பலருக்கு அன்றாட வங்கிப் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதுகூட தெரியவில்லை. தற்போதுள்ள வங்கிகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு பயிற்சிபெற்று ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளுக்கு அரசியல் தலையீடுதான் காரணம். அரசியல்வாதிகளின் சிபாரிசு இருந்தால் மட்டுமே வங்கிக் கடன் கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, தகுதிவாய்ந்த அனைவருக்கும் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். ஆய்வை  அடுத்து ஆளுநர் மாளிகை திரும்பிய  கிரண்பேடி, வாட்ஸ்அப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மாநில கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் குறிப்பிட்ட சில உதவிப் பொதுமேலாளர்களை இடமாற்றம் செய்ய புதுச்சேரி மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். அதேபோல, 6 வாரங்களுக்குள் மாநில கூட்டுறவு வங்கிக்கு நிர்வாக இயக்குநர், பொதுமேலாளரை டெபுடேஷன் அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். இதன்மூலம், வங்கிகள் உரிய வகையிலும், தேவையற்ற அரசியல் குறுக்கீடுகள் இல்லாமலும் இயங்க முடியும். வங்கியிலிருந்து எடுத்துவரப்பட்ட ஆவணங்களைத் தலைமைச்செயலருக்கு அனுப்பிவைத்திருக்கிறேன். அந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணைசெய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். கிரண்பேடியின் இந்த அதிரடி உத்தரவு, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!