வெளியிடப்பட்ட நேரம்: 09:59 (13/03/2018)

கடைசி தொடர்பு:10:25 (13/03/2018)

"காட்டுத்தீ தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?" குரங்கணி விபத்து பற்றி வனவழிகாட்டி

ஞாயிறு ஆரம்பித்து இப்போது வரை தேனி மாவட்டம் குரங்கனியில் காட்டுத்தீ பற்றிய பல தகவல்கள் தீயை விட வேகமாக இணையத்தில் பரவிக் கொண்டிருக்கின்றன. தீயை எப்படி அணைப்பது எனத் தெரியாமல் தவித்த அரசுக்கு எப்படி அணைக்கலாம் என அறிவுரைகள்! அத்தனை மாணவிகள் ஏன் காட்டுக்குள் போனார்கள் எனக் கேள்விகள்; காட்டுக்குள் போன மாணவிகள் நிலை என்ன என்கிற ரீதியில் விவாதங்கள்;  விபத்தில் சிக்கியவர்கள் பத்திரமாய் திரும்ப பிரார்த்தனைகள்! மேற்கூறிய ஒவ்வொரு விஷயத்திற்குப் பின்னும் ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன.

ஞாயிறு இரவு 7 மணிக்கு கோத்தகிரியிலிருந்து கோவைக்கு 3 நண்பர்கள் காரில் வந்து கொண்டிருந்தோம். கோத்தகிரிக்கு அருகில் இருக்கிற மேல் தட்டப்பள்ளம் அருகில் வரும் பொழுது எதிரே இருந்த வனப்பகுதியில் தீ எரிவது  தெரிந்தது. கோத்தகிரி, கூட்டடா பகுதிக்கு அருகில் உள்ள நெட்டக்கல் மற்றும் வாகப்பனை வனப்பகுதி அது. முன் எந்த அளவிற்கும் இல்லாத வகையில் கொழுந்து விட்டு எரிந்தது. இங்கிருந்துதான் எங்களுக்குள் காட்டுத் தீ குறித்த உரையாடல் தொடங்கியது. பீடி, சிகரெட் பிடிப்பவர்களின் அலட்சியம், காட்டுப் பகுதிகளுக்கு அனுமதியில்லாமல் செல்லும் மர்ம நபர்கள் எனக் காட்டுத் தீ பின்னணியில் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. இரவு 7:45 மணிக்கு கார் மேட்டுப்பாளையம் வந்தடைந்ததும் வாட்சப்பில் வந்து விழுந்த செய்திகள் எல்லாம் குரங்கணி காட்டுத் தீ பற்றியே இருந்தன. தீயை அணைக்கப் போராட்டம், ஹெலிகாப்டர்கள் விரைந்தன, மாணவிகள் மீட்கப்படுகிறார்கள், 2 பேர் மரணம் எனச் செய்திகள் முதலில் இப்படித்தான் வர ஆரம்பித்தன. அடுத்த பத்து நிமிடங்களுக்கொரு வீடியோ பதிவுகள். அதிலொன்று தீக்காயங்களோடு உயிருக்குப் போராடுகிற பெண் ஒருவர் “அண்ணா தண்ணீ, தண்ணீ“ என்கிற வார்த்தைகள். மனிதம், வனம், பயணம் என யோசிக்கும் மனங்களிலெல்லாம்  இனி அந்த வார்த்தைகள்  எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

தேனீ

காட்டுத்தீக்கு முக்கியக் காரணமாக சொல்வது சமூக விரோதிகளின் நடவடிக்கைகளைத்தான். இடி மின்னல் கூட தீ பிடிக்கக் காரணமாக அமையும். ஆனால் நேற்று நிகழ்ந்த விபத்திற்கு அவை காரணமல்ல எனும் போது மனிதர்களைத் தவிர வேறு யாரையும் குற்றம் சுமத்த முடியவில்லை. முன்பு இருந்த காடுகள் இப்போது இல்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்வதே மிகப்பெரிய ஆபத்தின் தொடக்கம்தான். பசுமை மாறாக் காடுகள், ஈரநிலக் காடுகள் எனப் பெயரெடுத்த காடுகள் காய்ந்து போய் கிடக்கின்றன. நீர்நிலைகள் வறண்டு போய் கிடக்கின்றன. எப்போதும் ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிற கோடைக்காலம் இந்த வருடம் பிப்ரவரி மாதமே தொடங்கி விட்டது. பருவ மழை பொய்த்தது, கடும் வெயில் போன்ற காரணங்களால் நேற்றைய தீ ஏற்பட்டிருக்கலாம். ஆனால் உயிர்கள் பறி போனதற்கும், காயமடைந்ததற்கும் காரணங்கள் வேறாக இருக்கின்றன. அவை ஆராயப்பட வேண்டும்.

உண்மையில் காடுகளுக்குள் சென்று சாகசம் புரிகிற நிலைமையில் நமது காடுகள் இருக்கின்றனவா என்றால், இல்லை என்கிற பதிலே வந்து விழுகிறது. இந்தியக் காடுகள் 100 சதவிகித பாதுகாப்பில் இருக்கிறது என்கிற ஒரு மாயக் கட்டமைப்பை அரசு நிறுவியிருக்கிறது. உண்மையில் அரசு, காடுகளை பாதுகாப்பதில் அக்கறையோடு இருந்திருந்தால் இன்றைய தேதியில் இப்படியொரு அசம்பாவிதம் நடந்திருக்காது. தவறு நிகழ்ந்து விட்டது என்றதும், எப்பொழுதும் போல ஒருவர் மாறி ஒருவரை குற்றம் சொல்லுவது வழக்கம். ஆனால், இம்முறை முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் என எல்லோரும் சம்பவத்தில் நேரடியாகத் தலையிட்டு விபத்தில் சிக்கியவர்கள் அனுமதியில்லாமல் காடுகளுக்குள் சென்றிருக்கிறார்கள் எனப் பேட்டி கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் துணை முதல்வர் விபத்து குறித்து விசாரிக்கப்படும் என்கிறார். வனத்துறையின் அனுமதியில்லாமல் 39 பேர் ஒரு வனப்பகுதிக்குள் செல்லும் அளவிற்கு வனத்துறை பலவீனமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. இன்றைய தேதியில் வனத்துறையில் 1556 வனத்துறை பணியிடங்களில், 1100 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன . இருபது பேரின் வேலையை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. அந்தப் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. மேலும் பணி நிரந்தரம் செய்யப்படாத 908 வேட்டைத் தடுப்பு காவலர்கள் வனத்துறையில் பணிபுரிகிறார்கள். உயிரைப் பணயம் வைத்து காடுகளுக்குள் செல்கிற அவர்களின் 90 சதவிகித பணியாளர்களிடம் முறையான பாதுகாப்புக்கு ஆயுதங்கள் என எதுவுமில்லை. இதை விட வனத்துறையில் தீ தடுப்பு படை என்கிற ஒரு பிரிவு உள்ளது. கோடைக்காலங்களிலும், தீ பிடிக்கிற கால கட்டத்தில் மட்டும் இவர்களைப் பயன்படுத்திவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். அவர்களுக்கான எந்த உத்திரவாதமும் வழங்கப்படுவதில்லை. மொத்த தமிழகமும் நடந்த தவறுக்கு காரணமாக மலையேற்ற குழுவினரையும், தொடர்புடைய நிறுவனங்களையும் மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறது. உண்மையில், தவறுக்கு முக்கியக் காரணம் எங்கே இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதைச் சரி செய்தாக வேண்டும்.

தேனீ மலையேற்றம்

இங்கே நாம், வெறுமனே வனத்துறையை மட்டும் குறை சொல்லிவிட்டு ஒதுங்கி விட முடியாது. இந்த விஷயத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சட்ட விரோதமாக வனத்திற்குள் அழைத்துச் செல்கிற தனியார் வழிகாட்டிகளுக்கு வனப்பகுதியின் முழுமையான வழித்தடங்கள் தெரிவதில்லை. ட்ரெக்கிங் செல்கிற வனப்பகுதியை தெரிந்து வைத்திருப்பதை விட வனத்திற்குள் இருக்கிற வழித்தடங்களை முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் யானைகளின் வழித்தடம் எது, புலிகளின் வழித்தடம் எது, என ஒவ்வொரு மிருகங்களின் வழித்தடங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆபத்து வழிதடுமாறுகிற யானைகள் மூலமாகவும் நிகழலாம், மனிதர்களாலும் நிகழலாம். வனப்பகுதியில் மனிதன் சிறுநீர் கழிப்பதிலிருந்து, உணவு உண்பது வரை ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர் வினை உண்டு. பெயருக்கு வழிகாட்டியாக இருப்பது எப்படியான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதற்கு நேற்றைய நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.

நேற்றைய விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட உள்ளூர் வன வழிகாட்டி ஒருவர் "இந்த இடத்துலையா உயிரை விட்டாங்கனு நினைக்கும் போது  வயித்தெரிச்சலா இருக்கு, உயிர் விடக் கூடிய அளவிற்கு இது அபாயமான பகுதி இல்லை" என்கிறார். வனத்துறையில் பல ஆண்டுகளாக வேட்டைத் தடுப்பு பிரிவில் பணிபுரியும் ஒருவர் பேசும் பொழுது "ஒரு வேட்டைத் தடுப்பு காவலர் இருந்திருந்தால் கூட இந்தச் சம்பவம் நடந்திருக்காது. காற்றின் வேகம், தீயின் திசை எனக் கணக்கிட்டு பத்து நிமிடங்களில் தீயை அணைத்திருக்கலாம். இந்த விபத்து எல்லோருக்கும் ஒரு பாடம் " என்கிறார்.

காட்டுத்தீ

காடுகள் இப்பொழுது காடுகளாக இல்லை என்பதை யாரும் உணர்வதில்லை. ஏனெனில் சில காலமாக அங்கே வன விலங்குகளே வாழ்விழந்து நிற்கின்றன. அவை சாலைக்கு வருவதும், ஊருக்குள் புகுந்து ஆடுகளைக் கொல்வதற்கும் காரணம் வனம் வனமாக இல்லை என்பது மட்டும்தான். ட்ரெக்கிங் என்கிற பெயரில் வனத்திற்குள் செல்கிறவர்களின் பேஸ்புக் பக்கங்களைப் பார்க்க நேரிட்டது. வனப்பகுதிக்குள் சென்று வருவதால் மன அமைதி கிடைப்பதாகவும்,  மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) குறைவதாகவும் சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் அப்படியொரு மாயத் தோற்றத்தை இங்கே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு மன உளைச்சல் என்று யாரும் காடுகளுக்கோ மலைகளுக்கோ சென்றதாக வரலாறு இருக்கிறதா? காடுகளுக்கும், மலைகளுக்கும் சென்றவர்கள் இயற்கை ஆர்வலர்களாகவும், பயணிகளாகவும் மட்டுமே இருந்தார்கள். அவர்களிடம் ஒரு காரணமிருந்தது. நூறு பேரில் ஒருவர் அப்படியான பயணம் மேற்கொள்வர். ஆனால் இன்று அந்த 100 பேரோடு சேர்த்து 101 பேராகப் பயணம் மேற்கொள்கிறார்கள். 

மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது எங்காவது போகலாம் என நினைக்கிறவர்களுக்கு வலை விரிக்க ஆயிரம் நிறுவனங்கள் இருக்கின்றன. கார், விமானம், தங்கும் விடுதிகள், சுற்றுலா நிறுவனங்கள் என மன அழுத்தத்தை பணமாக்குகிற கலை இங்கிருக்கும் சாதாரண வழிகாட்டிக்குக் கூட இருக்கிறது. “இப்போதுதான் நிம்மதியா இருக்கு” எனக் காட்டுக்கு  பாதுகாப்பில்லாமல் செல்லும் தலைமுறைக்கு இந்த விபத்து ஒரு பாடமாக இருக்குமென நினைக்கிறோம். எல்லாத் தவறுகளையும் நாம் ஒருவரே செய்து விட முடியாது. மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதே சிறந்தது.


டிரெண்டிங் @ விகடன்