வழக்கறிஞரைத் தாக்கி தன்னுடன் செல்ஃபி எடுக்கச் சொன்ன சப்-இன்ஸ்பெக்டர்!

கேரளாவில் மதுவைத் தாக்கி செல்ஃபி எடுத்தது போல, தமிழகத்தில் வழக்கறிஞர் ஒருவரைத் தாக்கி, அவரையே செல்ஃபி எடுக்கவைத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவிவருகிறது.

வழக்கறிஞரைத் தாக்கி செல்ஃபி எடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

இந்தச் சம்பவத்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் வைத்து இந்த செல்ஃபி எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்துக்கு தன் கட்சிக்காரர் சார்பில் புகார் கொடுக்க  பெரியசாமி என்கிற வழக்கறிஞர் சென்றுள்ளார். சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரத்திடம் வழக்கை பெற்றுக்கொண்டு சி.எஸ்.ஆர். ரசீது தரும்படி கேட்டுள்ளார். அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆவேசமடைந்த சுந்தரம், வழக்கறிஞர் பெரியசாமியைக் கடுமையாகத் தாக்கினார். பெரியசாமியின் முகம் உடைந்து ரத்தம் கொட்டியது. 

பின்னர், ரத்தம் கொட்டும் முகத்துடன் நின்ற வழக்கிறஞரைத் தன்னுடன் செல்ஃபி எடுக்கக் கூறியுள்ளார். வழக்கறிஞர் பெரியசாமி எடுத்த செல்ஃபியை சமூகவலைதளங்களில் வெளியிட்டார் சுந்தரம். வழக்கறிஞர்களை எச்சரிக்கும் வகையில் பெரியசாமி ரத்தம் தோய்ந்த முகத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரம் வெளியிட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து பெரியசாமி, வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன் கிருஷ்ணனிடம் புகார் தெரிவித்தார். 

இதையடுத்து, நேற்று சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கை தொடங்கும் முன், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை மோகன கிருஷ்ணன் காட்டினார். மேலும், இந்தச் சம்பவம்குறித்து தானாக முன்வந்து வழக்குப்பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.  புகைப்படத்தைப் பார்த்துக் கோபமடைந்த நீதிபதிகள், 'இது போன்ற சம்பவங்களை ஒரு போதும் ஏற்க முடியாது. வழக்கறிஞரை தாக்கியதுடன் செல்ஃபியும் எடுப்பாரா... 'என்று  கேட்டனர். அதோடு, தாமாக முன்வந்து வழக்கைப் பதிவுசெய்யவும் முன்வந்தனர்.

கேரளாவில் மது தாக்கப்பட்டபோதும், இதே போன்று செல்ஃபி எடுத்தவரை போலீஸார் கைதுசெய்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவுசெய்து சிறையில் அடைத்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!