வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (13/03/2018)

கடைசி தொடர்பு:17:11 (09/07/2018)

`மாப்ளே... விட்டுடாதே! கைகோத்து ஆளை அமுக்கு' - அன்னவாசலில் அதிர்ந்த கபடி வீரர்கள்

அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டியில், ஊர்பொதுமக்கள் சார்பில் கபடிப் போட்டி நடைபெற்றது. இதில், 35 அணிகள்  உற்சாகமாகப் பங்கேற்றன. முன்னாள் கபடி வீரர்களும் இந்நாள் கபடி ஆர்வம்கொண்ட சிறுவர்களும் ஆர்வத்துடன் போட்டியைக் கண்டு சந்தோஷம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டி கிராமத்தில், ஆண்டுதோறும் கபடிப் போட்டி 
நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் கபடிப் போட்டி  நடைபெற்றது. இதில் தேனி, திருச்சி, புதுக்கோட்டை, திருமயம், ஆவுடையார்கோவில், இலுப்பூர்  உள்பட  பல்வேறு பகுதிகளிலிருந்து 35 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் பல்வேறு சுற்றுக்களாக நடத்தப்பட்டது. இந்த கபடிப் போட்டியை, உள்ளூர் வர்ணனையாளர், ஐபிஎல் போட்டி லெவலுக்கு வர்ணனை செய்துகொண்டிருந்தார். களமிறங்கிய அணிகளில், எந்தத் தரப்பில் ஆட்கள் அவுட்டானாலும் கைதட்டலும் விசிலும் விண்ணைப் பிளக்கும்விதமாக இருந்தது.

கபடி

"மாப்ளே...விட்டுடாதே! கைகோத்து ஆளை அமுக்கு" என்று, கபடிப் போட்டிக்கே உரித்தான கள டிப்ஸ்களை வீரர்கள் தங்களுக்குள் கூறிக்கொண்டு, போட்டியில் முனைப்புடன் விளையாடினார்கள். தோற்ற அணிகளைச் சேர்ந்த இளைஞர்கள், சோர்வோ, வருத்தமோ இல்லாமல் பேசினார்கள். "போட்டியில் ஜெயிக்கிறது தோக்குறது ஒரு விஷயமே இல்லை. கபடியில கலந்துக்கிட்டோம்கிற சந்தக்‌ஷம்தான் முக்கியம். பரிசைத் தாண்டி, பல மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களுடன் விளையாடும்போது, நம்ம உடல் இன்னும் வலுவாகுது. புதுப்புது யுக்திகளையும் கத்துக்க முடியுது. பரிசு கிடைத்தால் கூடுதல் சந்தோஷம். கிடைக்கலேன்னாலும் நம்ம தமிழ்நாட்டின் கண்டுபிடிப்பான இந்தப் பாரம்பர்ய விளையாட்டை மறந்துடாம, விட்டுக்கொடுக்காம விளையாடிய மன திருப்தியுடன்  ஊருக்குப் போவோம். நம்ம மூச்சுக்கு பயிற்சி குடுக்கறதுல யோகாவைவிட கபடி விளையாட்டுதான் பெட்டர்" என்றார்கள்.

 முதல்பரிசை கொடும்பாலூர் அணியும், 2-வது பரிசை பெருமநாடு அணியும், 3-வது பரிசை குறிஞ்சிப்பட்டி அணியும், 4-வது பரிசை செங்கப்பட்டி அணியும் பெற்றன. வெற்றிபெற்ற உள்ளூர் வீரர்கள் கூறும்போது, " நம்ம புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிகமான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும். அதேமாதிரிதான் கபடி போட்டிகளும். அதுல எங்களுக்கு எப்பவுமே பெருமைதான்" என்றார்கள். போட்டியில்  வெற்றிபெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் கோப்பைகள், பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை அன்னவாசல் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, வீரர்களை பாரபட்சம் இல்லாமல் உற்சாகப் படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை செங்கப்பட்டி  இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீஸார் செய்திருந்தனர்.