சரக்குப் பெட்டகங்களைக் கையாள்வதில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், ஒரே நாளில் 6,43,720  டி.இ.யூ., சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. 

தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

இதுகுறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக்கழக ஜெயக்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,  “இந்தியத் துறைமுகங்களில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தென்னிந்தியாவின் பொருளாதார இயந்திரமாகச் செயல்பட்டுவரும் இத்துறைமுகம், கடந்த 07.03.18-ம் தேதி அன்று, ஒரே நாளில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 720  டி.இ.யூ., சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டு, கடந்த நிதி ஆண்டில் கையாண்ட அளவைவிட  கூடுதலாக  1,617 சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இச்சாதனை, கடந்த நிதி ஆண்டைவிட 24 நாள்களுக்கு முன்னதாகவே நடந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும் துறைமுகங்களில், நான்காவது பெரிய சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் துறைமுகமான இத் துறைமுகம், கடந்த 11.03.18 வரை 6,52,168 டி.இ.யூ., சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில், கையாண்ட சரக்குப் பெட்டகங்களை ஒப்பிடுகையில், இத் துறைமுகம் 8.63 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. 

தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

இத்துறைமுகத்தில், ’பி.எஸ்.ஏ., சிக்கால் சரக்குப் பெட்டக முனையம்’ மற்றும் ’தக்‌ஷின் பாரத் கேட் வே சரக்குப் பெட்டக முனையம்’ ஆகிய இரண்டு சரக்குப் பெட்டக முனையங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த இரண்டு சரக்குப் பெட்டகங்களின் கையாளும் திறன் 1.17 மில்லியன் டி.இ.யூ., ஆகும். இந்தியத் துறைமுகங்களில், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு சரக்குப் பெட்டகங்கப் பரிமாற்றம் செய்வதற்குக் குறைந்த அளவு நேரம் எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இத்துறைமுகம்மூலம் பருத்தி நூல், கைத்தறி இயந்திரங்கள், கடல் உணவுகள் மற்றும் காகித சரக்குகள் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகிறது. அதேபோல, பருத்திநூல், உலோக ஸ்கிராப், காகிதக்கழிவு மற்றும் ரசாயனம் ஆகிய சரக்குகள், ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியும் செய்யப்படுகிறது. இத்துறைமுகத்திற்கு மிக அருகில் ஒரு உள்நாட்டு சரக்குப் பெட்டக முனையம் மற்றும் 14 சரக்குப் பெட்டக நிலையங்கள் அமைந்திருப்பது, சரக்குப் பெட்டகங்களைத் துறைமுகத்திற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் எளிதாக எடுத்துச்செல்லும் வகையிலும் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.

  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!