மனைவி தற்கொலை அறிந்து எஸ்கேப்! நிர்மலாவின் கணவரை பிளான்போட்டு பிடித்த போலீஸ்

தனது மனைவி நிர்மலாவை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியதற்காக, அவரது கணவர் நடேசனை ஆலங்குடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

நிர்மலா- கணவர் நடேசன்

புதுக்கோட்டை  மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ளது, கூழையன்காடு என்ற கிராமம். இங்கு வசித்துவந்த நடேசன் என்பவரின் மனைவி நிர்மலா,  கடந்த 10-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்குக் காரணம்  நடேசன்தான் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் நிர்மலாவின் உறவினர்களும் ஊர்க்காரர்களும் கடந்த 11-ம் தேதி சாலை  மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, திருச்சியில் தலைமறைவாக இருந்த நடேசனை அவரது உறவினர்கள் மூலமாகப் பேசி, ஊருக்கு வரவழைத்த போலீஸ், அவரை நேற்று (12-03-2018) மாலை கைதுசெய்தது. 10-ம் தேதி, நிர்மலா தற்கொலைசெய்துகொண்டார். 11-ம் தேதி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 12-ம் தேதி, நடேசன் கைது என்று, கடந்த மூன்று நாள்களாக கூழையன்காட்டில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ''அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக வேலைபார்த்துவருகிறார் நடேசன். இவரை ஊரில் நாகேஷ் என்றுதான் அழைக்கிறார்கள். நடேசனுக்கும் நிர்மலாவுக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும்  குழந்தை இல்லை. அது சம்பந்தமான பிரச்னை வரும்போதெல்லாம், 'நாம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம்' என்று விடாமல் நடேசனிடம் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், நடேசன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, நடேசன் இன்னொரு திருமணம் செய்து கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். இதையறிந்த நிர்மலா, மனம் உடைந்துபோனார்.  மனைவி உயிருடன் இருக்கும்போது இன்னொரு திருமணம் செய்துகொள்ள சட்டத்தில் இடமில்லை.  மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தால் மறுதிருமணம் செய்துகொள்ளலாம். அதுதான் சட்டம் என்பதால், நடேசன் நிர்மலாவிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான மறைமுக முயற்சிகளைச் செய்திருக்கிறார்.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட  நிர்மலா, பித்துப் பிடித்தவராக  காணப்பட்டிருக்கிறார். உறவினர்கள் வீட்டுக்கு வந்து விசாரித்தபோது, நடேசன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ள மிகத் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைச் சொல்லி அழுதிருக்கிறார். உறவினர்களும் அவருக்கு  சமாதானம் கூறிச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 10.02.2018 அன்று காலை  நடேசன் திருச்சிக்கு சென்றிருக்கிறார். வீட்டில் நிர்மலாவைத் தவிர வேறு யாரும் இல்லை. அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, நிர்மலா தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், நிர்மலா தூக்கில் தொங்கி இறந்திருப்பதாக உடல்கூறாய்வுசெய்த மருத்துவர் குறிப்பிட்டிருக்கிறார். நிர்மலா தற்கொலைசெய்துகொண்ட தகவல் அறிந்த நடேசன், திருச்சியிலேயே தலைமறைவாகி விட்டார். ஊருக்குத் திரும்பவில்லை. மொபைல் போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். அவ்வப்போது அவர் தனது உறவினர்களுடன் பேசி, நிலைமையைத் தெரிந்துகொண்டிருக்கிறார். இந்தத் தகவலை அறிந்த நாங்கள், அந்த உறவினர்கள் மூலமாகவே பேசி, நடேசனை ஊருக்கு வரவழைத்தோம்.  'தற்கொலைக்குத்  தூண்டுதல் பிரிவுகளின் கீழ் அவரைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!