வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (13/03/2018)

கடைசி தொடர்பு:12:40 (13/03/2018)

2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு! - தமிழ் பிராமி எழுத்துக்களைப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து, மதுரை அருகிலுள்ள கொங்கர் புளியங்குளத்தில் மாணவ மாணவியர்களுக்கு தமிழ் பிராமி கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி முகாமை நடத்தின.

மாணவர்கள்
 

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு, இப்பள்ளியின் 9, 10-ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு, இடைக்காலத் தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள் படிக்க, படியெடுக்க பயிற்சி அளித்துள்ளார். மேலும் 8, 9-ம் வகுப்பு பயிலும் 20 மாணவ மாணவியர்களுக்குத் தமிழ்ப் பிராமி எழுத்துகளை எழுதவும், படிக்கவும் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள், கடந்த ஒரு மாதமாக திருக்குறள், புறநானூறு உள்ளிட்ட சங்கத்தமிழ் பாடல்களை தமிழ்ப் பிராமி எழுத்துகளில் எழுதிப் பயிற்சிபெற்றனர். ரா.கோகிலா, ச.ஜாஸ்மின், மு.சுதர்ஸன், த.சந்துரு, ச.கவிதா, ச.சாருமதி ஆகிய மாணவ மாணவியர் தேர்வுசெய்யப்பட்டு, கல்வெட்டுகளில் உள்ள தமிழ்ப் பிராமி எழுத்துகளைப் படித்துப் பயிற்சிபெற, மதுரை அருகிலுள்ள கொங்கர் புளியங்குளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இங்கு, இயற்கையான குகைத்தளத்தில் 50-க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. அக்குகையின் விளிம்புப் பகுதியில், மூன்று தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் அடுத்தடுத்து உள்ளன. இவை 2,200 ஆண்டுகள் பழைமையானவை.

தமிழ்ப் பிராமி எழுத்துகளே முதலில் தோன்றிய எழுத்து வடிவம். இதை, தமிழ் எழுத்துகள் எனவும் கூறுவர். தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள் பெரும்பாலும் மலைக்குகைகளிலேயே உள்ளன. ராமநாதபுரம் பகுதிகளில் இவை இல்லையெனினும் அழகன்குளம், தேரிருவேலியில் நடந்த அகழாய்வுகளில், இந்த எழுத்துகள் எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. மதுரையைச் சுற்றியுள்ள மலைக்குன்றுகளில், சமண முனிவர்கள் தங்கியிருந்த குகைகளில் கற்படுக்கைகள் அமைத்துக்கொடுத்தவர்கள் பற்றிய செய்திகளையே பெரும்பாலான பிராமி கல்வெட்டுகள் சொல்கின்றன.

இக்கல்வெட்டுகளில் உள்ள தமிழ்ப் பிராமி எழுத்துகளைப் பார்த்து எழுதி, அதன் தற்கால தமிழ் வடிவத்தையும் எழுதினர். இக்கல்வெட்டுகள் சொல்லும் செய்திபற்றி, மன்றப் பொறுப்பாசிரியர் வே.ராஜகுரு மாணவர்களுக்கு விளக்கினார். உபறுவன், சேரஅதன், பிடன் ஆகிய ஆள் பெயர்களும், பாகனூர் எனும் ஊர்ப் பெயரும் இக்கல்வெட்டுகளில் இருந்ததை வாசித்துத் தெரிந்துகொண்டனர். மலை, பொன் ஆகியவற்றின் குறியீடுகள், இரு கல்வெட்டுகளில் இருந்ததையும் அவர்கள் நேரில் பார்த்து அறிந்தனர்.