வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (13/03/2018)

கடைசி தொடர்பு:12:20 (13/03/2018)

குரங்கணி தீ விபத்து எதிரொலி: சதுரகிரி மலைக்குச் செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

குரங்கணி மலையில்  காட்டுத்தீயால் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்து மலை வனப்பகுதிக்குள் செல்ல விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பக்தர்கள் சென்றுவரும் சதுரகிரி மலைக்குச் செல்லவும் பல விதிகளை அறிவித்துள்ளது வனத்துறை.

குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய, மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற 10 பேர் மரணமடைந்தனர். பல பேர் காயமடைந்துள்ள  நிலையில், வனத்துறையின் பாதுகாப்பு மிகுந்த ஆபத்தான வனப்பகுதிக்குள் அவர்களை அனுமதித்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  இனி, மலையேற்றப் பயிற்சிக்கு கோடை காலத்தில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது.

குரங்கணி தீ விபத்து


இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள பிரசித்திபெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அமாவசை, பௌர்ணமி நாள்களில் கிரிவலம் செல்ல வருவார்கள். ஆண்டுதோறும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆனாலும், இக்கோயில் வனத்துறையின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ளதால், ஏற்கெனவே அதிகமான கெடுபிடிகளை வித்தித்துள்ள நிலையில், குரங்கணி சம்பவத்துக்குப் பிறகு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. ''இனி, பக்தர்கள் காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செல்ல  அனுமதிக்கப்படுவர். அனுமதி இல்லாத நாள்களில்,  கோயிலுக்குச் செல்ல கண்டிப்பாக அனுமதி இல்லை. பக்தர்கள் செல்லும் நாள்களில், தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவர்'' என விருதுநகர் மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது. இதனால், சதுரகிரி சுந்தர மகாலிங்க பக்தர்கள் வேதனை அடைந்துள்ளார்கள். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க