' ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவார்கள்!'   - ஆதரவாளர்களை எச்சரித்த தினகரன்

டி.டி.வி.தினகரன்

துரையில் புதிய கட்சியின் பெயரை வரும் 15-ம் தேதி அறிவிக்க இருக்கிறார் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ' டெல்லி உயர் நீதிமன்றம் கொடுத்தது தற்காலிக தீர்வுதான். இன்னும் அறுபது நாள்களில் நிரந்தரமான தீர்ப்பைப் பெறுவோம். 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பில் அவசரம் காட்டினால், ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்துவிடுவார்கள்' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் தினகரன். 

டெல்லி உயர் நீதிமன்றத்தில், 'அனைத்திந்திய அம்மா அண்ணா தி.மு.க'., 'எம்.ஜி.ஆர். அம்மா தி.மு.க'., 'எம்.ஜி.ஆர். அம்மா திராவிடர் கழகம்' ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றையும் குக்கர் சின்னத்தையும் ஒதுக்குமாறு வழக்குத் தொடர்ந்திருந்தார் தினகரன். இந்த வழக்கில், குக்கர் சின்னத்தை ஒதுக்கியும் மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்கீடு செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்பால் உற்சாகமடைந்த தினகரன், ' மதுரை, மேலூர் பொதுக் கூட்டத்தில் கட்சிப் பெயர், கொடியை அறிவிப்பேன்' எனத் தெரிவித்தார். 

" டெல்லி உயர் நீதிமன்றத்தில் இப்படியொரு தீர்ப்பு வருவதற்கு தினகரன் மனைவி அனுராதா மிக முக்கியமான காரணமாக இருந்தார். 15 நாள்கள் டெல்லியிலேயே தங்கியிருந்து, சட்ட ஆலோசனைகளை நடத்தி வந்தார். இதைப் பற்றி தினகரனும் சில இடங்களில் குறிப்பிட்டார். ' உள்ளாட்சித் தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடாகத்தான், உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. இன்னும் 2 மாதங்களுக்குள் நிரந்தரத் தீர்ப்பைப் பெற்றுவிடுவோம். அதற்குள், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு சென்றாலும் நாம் வெற்றி பெறுவோம். விரைவில் கட்சிப் பெயரை அறிவிப்பது அவசியம்' என்பதில் தெளிவாக இருக்கிறார் தினகரன். ' எங்கள் அணியில்தான் பெரும்பான்மையான உறுப்பினர்களும் நிர்வாகிகளும் இருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி அதற்கான சான்று' என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்தோம். அதன் பலனாகத்தான் இப்படியொரு தீர்ப்பைப் பெற்றோம்" என விவரித்த தினகரன் ஆதரவாளர் ஒருவர், 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்" சென்னை, உயர் நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்களின் தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. அதேபோல், நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பும் வர இருக்கிறது. இந்த வழக்கில், எங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். காரணம், எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து எங்கள் வழக்குக்குப் பொருந்தும். 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணையில், ' நம்பிக்கை வாக்கெடுப்பே நடக்காதபோது, எப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும்? ஆளுநரிடம்தானே அவர்கள் மனு கொடுத்தார்கள். உங்கள் பதிலைச் சொல்லுங்கள் வைத்தியநாதன்' என எடப்பாடி பழனிசாமி தரப்பின் வழக்கறிஞரிடம், தலைமை நீதிபதி பல கேள்விகளைக் கேட்டார். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. 

நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேர் வாக்களித்ததற்கு ஆதாரம் இருக்கிறது. மறுநாளே, பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்க.தமிழ்ச்செல்வனும் வெற்றிவேலும் மனு கொடுத்தார்கள். இதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுடைய பதவிகள் பறிபோவது உறுதி. ' 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு எப்போது?'  என அனைவருமே கேட்கிறார்கள். இந்த விஷயத்தில் டி.டி.வி. அவசரம் காட்ட விரும்பவில்லை. இதைப் பற்றி நாங்கள் கேட்டபோது, ' தீர்ப்பை நீதியரசர்கள் அறிவிக்கட்டும். இதை ஒரு விவாதமாக தேசிய அளவில் நாம் கொண்டு போக வேண்டாம். அப்படிச் செய்தால், டெல்லியின் முடிவு வேறு மாதிரி ஆகிவிடும். இவ்வளவுநாள் நாம் பட்ட கஷ்டமெல்லாம் வீணாகிவிடும்'  என ஒற்றை வரியில் முடித்துவிட்டார். டெல்லியின் முடிவு என அவர் அச்சப்படுவது, ஆளுநர் ஆட்சியை நினைத்துத்தான். அதற்கான ஒத்திகையை கடந்த நவம்பர் மாதமே ஆளுநர் தொடங்கிவிட்டார். தீர்ப்பு வந்த பிறகு, 'முதல்வர் பதவியை மட்டும் மாற்றிவிட்டு, அப்படியே இந்த அரசு தொடர வேண்டும்' என நினைக்கிறார் டி.டி.வி. அதனால்தான், நிதானமாகக் காய்களை நகர்த்தி வருகிறார்" என்றார் விரிவாக. 

" 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும், ஆளும்கட்சிக்கு எந்தவிதச் சிக்கலும் இருக்கப் போவதில்லை. பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடிய அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு பலம் இருக்கிறது. இதைப் பற்றி எம்.எல்.ஏக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ' தினகரன் தரப்பினரின் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம். அவர்கள் எதையாவது சொல்லி குழப்பிக் கொண்டிருப்பார்கள். நமக்கு ஆதரவாகத்தான் டெல்லி இருக்கிறது. நாம் கேட்டுக் கொண்டதால்தான், மானிய ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கி வைக்க வந்தார் பிரதமர். தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பும் நமக்கு சாதகமாகத்தான் வரும்' என உறுதியாகக் கூறியிருக்கிறார். சசிகலா ஆதரவு மனநிலையில் உள்ள எம்.எல்.ஏக்களையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். அதிருப்தி எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்றவும் உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர். தினகரன் அணியினர் என்ன செய்தாலும், இந்த ஆட்சிக்கு சிக்கல் வரப் போவதில்லை" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!