வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (13/03/2018)

கடைசி தொடர்பு:13:15 (13/03/2018)

ஆளுநரின் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற எஸ்.எஸ்.ஐ-யின் உயிரைப்பறித்த ஆம்னி பஸ்!

போலீஸ் எஸ்.எஸ்.ஐ. செல்லப்பா

ஆளுநரின் பாதுகாப்புப் பணிக்கு மோட்டர் சைக்கிளில் சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பா, விபத்தில் சிக்கி பலியானார். 

தேனி மாவட்டம், குரங்கணி வனப்பகுதியில் நடந்த தீவிபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மதுரைக்கு வந்தார். இதற்காக அவர் நாகர்கோவிலில் தங்கியிருந்தார். அவரது பாதுகாப்புப் பணிக்காக நெல்லை மாவட்டம், ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பா, நெல்லை-குமரி மாவட்ட எல்லையான காவல்கிணறு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பணகுடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட லெப்பை குடியிருப்பு  சாலை சந்திப்பில் செல்லப்பா சென்றபோது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ் மோதி காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். பலியான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாவுக்கு மைக்கேல் செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.