வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (13/03/2018)

கடைசி தொடர்பு:14:20 (13/03/2018)

காலில் விழுந்து கதறி அழுத பெண்! ஆறுதல்கூறி தேற்றிய ஆளுநர் புரோஹித்

பன்வாரிலால் புரோஹித்

மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் காலில் விழுந்து பெண் ஒருவர் கதறி அழுதார். அவருக்கு ஆறுதல் கூறி ஆளுநர் தேற்றினார்.

தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்ட 39 பேர்கள் கடந்த 11-ம் தேதி வனப்பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கினர். கடந்த 2 வாரங்களாக மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் போடி அருகே வனப்பகுதியில் தீ பரவி வந்தது. இந்நிலையில் சென்னை, திருப்பூர், ஈரோடு, சேலம், கேரளா உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சென்றபோது எதிர்பாராத விதமாக அவர்கள் இருந்த பகுதியிலும் தீ பற்றி மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் நேற்று தமிழக முதல்வர்  பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களையும் அவர்களின் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு இன்று வந்தார். பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை வார்டுகளில்  சிகிச்சைப் பெற்றுவருபவர்களைப் பார்வையிட்டார். பின்னர், உறவினர்கள் காத்திருப்பு அறைக்குச் சென்ற ஆளுநர் ஆறுதல் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், துக்கம் தாங்கமுடியாமல் ஆளுநர் காலில் விழுந்து கதறினார். ஆளுநர், `அனைவரும் கவலைகொள்ள வேண்டாம். அனைவரும் நலம் பெறுவார்கள்' என நம்பிக்கை தெரிவித்த பின் அங்கிருந்து கிளம்பினார். இதேபோல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தி.மு.க முன்னாள் அமைச்சர் ஐ.பெரியாசாமி உள்ளிட்ட பல கட்சியினர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.