வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (13/03/2018)

கடைசி தொடர்பு:14:40 (13/03/2018)

போலீஸைப் பதறவைத்த 200 பெண்கள்! சினிமாவை விஞ்சிய நிஜ சம்பவம்

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடையவரைப் பிடிக்கச் சென்ற காவலர்களை, 200 பெண்கள் சுற்றிவளைத்துக்கொண்ட சம்பவம், புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான மாறன், கடந்த 6-ம் தேதி படுகொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி மூர்த்தி, அவரது மனைவி திலகா, வினோத் உள்ளிட்ட 8 பேர் கும்பல்மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சுகுமாறன், விக்னேஷ், உதயா உள்ளிட்ட 4 பேர் வேளாங்கண்ணியில் கைதுசெய்யப்பட்ட நிலையில், மூர்த்தியின் மருமகன் ஞானசேகர், ராஜசேகர், மணிகண்டன், காண்டீபன் உள்ளிட்டோர் திண்டிவனம் நீதிமன்றத்திலும், புஷ்பராஜ், பிரபாகரன் இருவரும் புதுச்சேரி நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இதற்கிடையில், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள வினோத், குருசுகுப்பம் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர், வினோத் வீட்டை சுற்றிவளைத்தனர். அப்போது, வினோத்துக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் கைதுசெய்யக் கூடாது என்றும் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீஸ் வீட்டுக்குள் நுழைந்தால், குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொள்வோம் எனவும் மிரட்டினர். அதனால், வீட்டினுள் செல்ல தயங்கியது போலீஸ். அதேபோல, போலீஸ் சுற்றிவளைத்த தகவல் கிடைத்ததும், வினோத்துக்கு ஆதரவாக சுமார் 200 பெண்கள் அங்கு குவிந்ததோடு, போலீஸ் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு அமர்ந்தனர்.

புதுச்சேரி

அதைத் தொடர்ந்து, அங்கேயே முகாமிட்டு ஊர் பஞ்சாயத்தாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீஸார் வினோத்தை காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி கெஞ்சினர். அதையடுத்து, இரண்டு நாள்களில் தாங்களே வினோத்தை ஒப்படைக்கிறோம் என்று தெரிவித்தனர் பஞ்சாயத்தார். ஆனாலும், தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பெண்கள், வினோத் தப்பிச் செல்வதற்கு வசதியாக, அங்கிருந்த போலீஸாரை எங்கும் நகரவே முடியாத அளவுக்கு இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக்கொண்டனர். அவர்களிடமிருந்து விடுபடுவதற்காக சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாகப் போராடியுள்ளனர் போலீஸார். அப்போது, இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்ததுபோல வீட்டினுள் இருந்து வேகமாக வெளியேறி, தப்பிக்க முயற்சித்திருக்கிறார். அப்போது, மப்டியில் இருந்த சில போலீஸார், அவரைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களைத் தள்ளிவிட்டு தப்பித்துச் சென்றிருக்கிறார் வினோத்.

ரவுடி

''இந்த வழக்கில், ஆரம்பத்தில் இருந்தே போலீஸாரின் செயல்பாடுகள் படுமோசமாக இருந்துவருகிறது. மாறன் கொலை நடந்த அன்று, போலீஸ் வாகனத்தின்மீது ஏறி அரிவாளைச் சுழற்றி, ஒரு சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அதைக் கண்ட பொதுமக்கள், தலைதெறிக்க ஓடியுள்ளனர். ஆனால் அங்கிருந்த போலீஸார், அவர்களை எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்தனர். கொலை நடந்த உடனே, குருசுக்குப்பம் பகுதியில் போலீஸ் பாதுகாப்புக்கு நின்றிருந்தபோதும், மூர்த்தி வீட்டுக்குள் நுழைந்த ரவுடிக் கும்பல், வீட்டைச் சூறையாடியது. நேற்றுகூட, போலீஸாரை கட்டிப்பிடித்து குற்றவாளியைத் தப்பிக்கவைத்து, புதுச்சேரி போலீஸை சிரிப்பு போலீஸாக ஆக்கியிருக்கிறார்கள். கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரைக் கைதுசெய்யச் சென்றபோது தடுத்தவர்கள்மீது ஏன் வழக்குப் போடவில்லை? போலீஸைக் கட்டிப்பிடித்துக்கொண்டு குற்றவாளியைத் தப்பிக்கவைத்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்ன அரசியல் தலையீடு இதில் இருக்கிறது ?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து விளக்கம் கேட்க காவல்துறை கண்காணிப்பாளர் (கிழக்கு) வெங்கடசாமியைப் பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால், நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க