வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (13/03/2018)

கடைசி தொடர்பு:15:00 (13/03/2018)

ஓ.என்.ஜி.சி தொடர்ந்த வழக்கில் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேர் விடுதலை!

ஓ.என்.ஜி.சி தொடர்ந்த வழக்கில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைவர்,  பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேரை விடுதலை செய்து, திருவாரூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி குமார் தீர்ப்பளித்தார்.

திருவாரூர் அருகே உள்ள கீழப்படுகையில், கடந்த 2017-ம் ஆண்டு  மார்ச் 14 -ம் தேதி, கீழப்படுகையில் 2-வது எண்ணெய்க்கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்களைத் திரட்டிப்  போராடியதாக, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைவர், பேராசிரியர் ஜெயராமன், இளம்பரிதி, சிவக்குமார், பாண்டியன், முத்துக்குமார சாமி, குருமூர்த்தி, பிரபாகரன், ராஜாராமன் ஆகிய 8 பேர்மீது திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்தில் போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை, திருவாரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஒரு வருடமாக நடந்துவந்தது. 

இந்த வழக்கில், நீதிபதி குமார் இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, குற்றம் நிரூபிக்கப்படாததால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலைசெய்வதாக நீதிபதி அறிவித்தார். ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக போராசிரியர் ஜெயராமன் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கிலிருந்து அவர் விடுதலைசெய்யப்பட்டார். அவர்மீது மேலும் ஒருசில வழக்குகள் நிலுவையில் உள்ளன.