வெளியிடப்பட்ட நேரம்: 15:51 (13/03/2018)

கடைசி தொடர்பு:15:57 (13/03/2018)

“வாடி போடின்னு கூப்பிடுவாரு, தொட்டுத் தொட்டு பேசுவாரு” ஆசிரியர் மீதான வழக்கில் மேல்முறையீட்டை எதிர்நோக்கியிருக்கும் மாணவிகள்

மாணவி

து நடந்தது 2013-ம் ஆண்டு. அப்போ நான் ப்ளஸ் ஒன் படிச்சுட்டிருந்தேன். என் சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டதால் நானும் அம்மாவும் மட்டுமே இருந்தோம். வீட்டுவேலை பார்த்துதான் அம்மா என்னைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாங்க. எந்தப் பள்ளிக்கூடம் என் எதிர்காலத்துக்குத் துணை நிற்கும்னு நம்பினேனோ, எந்தப் பள்ளிக்கூடம் என்னையும் அம்மாவையும் இந்தச் சமூகத்துல உயர்த்தும்னு நினைச்சேனோ, எந்த ஆசிரியர்களால் என் வாழ்க்கை வசந்தமா மாறும்னு எதிர்பார்த்தேனோ, அந்த ஆசிரியர்களால்தான் என் வாழ்க்கையே போராட்டக் களமா மாறியிருக்கு” - தணலாய் வந்துவிழும் வார்த்தைகளில் சுமதியின் கண்கள் சிவந்து வெடிக்கின்றன. சுமதி மட்டுமின்றி, அவர் தோழிகளான ரோகிணி, பவித்ரா, நந்தினி (நால்வர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) போன்றோரிடமும் இதே கோபம் வெளிப்படுகிறது. யார் இவர்கள்? ஒரு முன்கதைச் சுருக்கம். 

செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அது. 2013-ம் ஆண்டில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இயற்பியல் ஆசிரியர் புகழேந்தி மற்றும் வேதியியல் ஆசிரியர் நாகராஜ், பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது. அப்போதைய ஆட்சியர் சித்ரசேனன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சேவியர் தனராஜ் ஆகியோரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளாகச் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்துவந்தது ."குழந்தைகளை பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழ் எந்தக்குற்றமும் நிரூபிக்கப்படாததால், இருவரும் நிரபராதிகள் என அறிவிக்கப்படுகிறார்கள் " என குறிப்பிட்டு அவர்களைக் கடந்த வாரம்  விடுதலை செய்து உத்தரவிட்டிருப்பது, அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.  அந்த நான்கு பெண்களிடமும் பேசினோம். 

“நாங்க ப்ளஸ் ஒன் படிக்கும்போதுதான் எங்க ஸ்கூலுக்கு இயற்பியல் பாடம் எடுக்க புகழேந்தி வந்தார். நாகராஜன் 13 வருஷமா அதே ஸ்கூல்ல வேதியியல் பாடம் எடுக்கிறவர். ஆரம்பத்திலிருந்தே நாகராஜன் எங்க ஸ்கூல் பொண்ணுங்களுக்குப் பாலியல் ரீதியா தொல்லை கொடுத்துட்டிருந்தவர்தான். இதை வெளியில் சொன்னா பள்ளி வாழ்க்கை முடிஞ்சிடுமேனு எந்த மாணவியும் சொல்லாமல் மறைச்சுட்டாங்க. நாங்க பத்தாம் வகுப்பு முடிச்சுட்டு ப்ளஸ் ஒன் போயிருந்தோம். நாகராஜன் எங்ககிட்டேயும் தப்பா நடந்துக்க ஆரம்பிச்சார். லேப்க்குப் போனால், அங்கே இங்கே கை வைப்பார். அப்டி இப்டின்னு பேசுவார். அவர் பண்ணினதை எல்லாம் வெளியில் சொல்றதுக்கே வாய் கூசுது'' எனச் சுமதி குரல் தடுமாறி நிறுத்த, அருகில் நின்றிருந்த ரோகிணி தொடர்கிறார். 

“அந்த வாத்தியாருங்க ரெண்டு பேருமே எங்களை வாடி போடின்னுதான் சொல்வாங்க. தொட்டுத் தொட்டுப் பேசுறதுதான் அவங்க பழக்கமே. 'என்னங்கடி சுடிதாருக்குள்ளே ப்ரா போட்டுருக்கீங்களா, ஷாலுக்கு பின் குத்தியிருக்கீங்களா'னு டச் பண்ணுவாங்க. டெஸ்கில் உட்கார்ந்திருக்கும்போது தள்ளி உட்காரச் சொல்லி தொடையைப் புடிக்கிறது தான் அவங்க வேலையே. அதையெல்லாம் இப்போ நினைச்சாலும் உடம்பு கூசுதுங்க. பொண்ணுங்கன்னா பயந்துகிட்டு வெளியில் சொல்ல மாட்டாங்கனு அவங்க நினைப்பு. ஆனால், நாமளும் விஷயத்தைச் சொல்லத் தயங்கினா, இவங்களால் இனி வரும் பொண்ணுங்களும் கொடுமைகளை அனுபவிப்பாங்கன்னுதான் துணிஞ்சு, எங்க வீடுகளில் சொன்னோம். இவள் அம்மா, எங்க அம்மா எல்லாருமே மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்தாங்க. அவங்க மூலமாகத்தான் மாதர் சங்கத்தைப் பார்த்து கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தோம்” என்கிறார். 

மாணவி

“புகார் கொடுத்து என்னங்க பிரயோஜனம். அஞ்சு வருஷம் ஆகிடுச்சு. ஆரம்பத்தில் எட்டு பொண்ணுங்க சேர்ந்து கம்ப்ளைன்ட் பண்ணினோம். கொஞ்ச நாளிலயே நாலு பொண்ணுங்க விலகிட்டாங்க. சுமதி வீட்டுக்கு நடுராத்தியில் போய் கதவைத் தட்டி 'ரெண்டு லட்சம் கொடுக்கிறோம். கேஸை வாபஸ் வாங்கிடுங்க'னு மிரட்டினாங்க. ஆம்பளைத் துணை இல்லாத வீடு. காசைக் கொடுத்தோ மிரட்டியோ பணிய வெச்சிடலாம்னு நினைச்சாங்க. ஆனால், சுமதி அம்மாவும் இந்த விஷயத்துல நியாயம் கிடைக்கணும்னு உறுதியா இருந்தாங்க. இந்த அஞ்சு வருஷத்துல எனக்குக் கல்யாணம் முடிஞ்சு, ஒரு குழந்தை இருக்கு. என் கணவரோட சப்போர்ட்தான் இப்போவரை நியாயத்துக்காகப் போராட வெச்சுட்டிருக்கு” எனத் துயரத்தை மீறி கம்பீரமாகப் பேசுகிறார் பவித்ரா. 

“எனக்குத் திருமணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆகுது. ஒரு பக்கம் கணவர் வீட்டைச் சமாளிச்சுட்டு இன்னொரு பக்கம் கோர்ட்டு கேஸுன்னு என் பாப்பாவைத் தூக்கிட்டு அலையறேன். 'நடந்தது நடந்துபோச்சு. பொண்ணுங்க வீம்பு புடிச்சா வாழ்க்கையே சீரழிஞ்சுப் போயிடும். கல்யாணம் பண்ணி கொழந்தை வந்ததுக்கு அப்பறமும் ஏன் இப்புடி கஷ்டப்படணும். அதுங்க ரெண்டுதான் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு அலையுதுங்கன்னா, நீயும் சேர்ந்து சுத்தறியே'னு காதுபடவே நிறைய பேரு பேசுறாங்க. ஆயிரமே இருந்தாலும் நாங்க வேதனையை அனுபவிச்சவங்க. எந்த உரிமையில் அந்த வாத்தியாருங்க எங்க மேல கை வெச்சாங்க. அன்னைக்கு நாங்க துணிஞ்சு வெளியில் வரலேன்னா, இப்போவரை எங்க ஊரைச் சுற்றி நடக்கும் இதுமாதிரியான கேவலங்கள் வெளியே வராமலேயே போயிருக்கும். இந்த அஞ்சு வருஷத்துல நாங்க எத்தனை போராட்டம் பண்ணியிருப்போம், உண்ணாவிரதம் இருந்திருப்போம். எங்க சக்திக்கு மீறி போராடினோம். ஆனால், அந்தக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்காம கோர்ட்டு எங்களை அவமதிச்சு தண்டிச்சிடுச்சு. இனி எந்த ஒரு மாணவியும் துணிஞ்சு வெளியில் வரமாட்டா. நாங்க இதை இப்படியே விடப்போறதில்லே. தொடர்ந்து போராடுவோம். குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கிற வரை ஓய மாட்டோம்” என்று ஆவேசத்தோடு பேசுகிறார் நந்தினி. 

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பிரமிளா பேசியபோது, “இது ஐந்து வருடப் போராட்டம். 2013-ம் ஆண்டிலிருந்தே நாங்க இந்த மாணவிகளுக்குத் துணையா நிற்கிறோம். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஆசிரியர்களுமே செல்வாக்கோடு இருப்பவர்கள். செங்கல்பட்டைச் சுற்றியுள்ள பல வி.ஐ.பி-க்களின் பிள்ளைகள் அவர்களிடம்தான் டியூஷன் படித்தார்கள். அதனால், அவர்களுக்கு எதிராக யாரும் வரவில்லை. ஆனால், இந்த நான்கு மாணவிகளும் அவர்களுக்குத் தண்டனை வாங்கிக்கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். நிச்சயமாக நாங்கள் கூடிய விரைவில் எங்கள் சங்கம் மூலமாக மேல்முறையீடு செய்து அந்த இரண்டு நபர்களுக்கும் தண்டனை வாங்கிக்கொடுப்போம்” என்கிறார் உறுதியாக.


டிரெண்டிங் @ விகடன்