வனத்துறையினர் மீதான புகார் ஆதாரமற்றது - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

குரங்கணி தீ விபத்தில் காயம்பட்டவர்களையும் அவர்களுடைய உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லவும் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ''மலையேறும் பயிற்சிக்குச் சென்றவர்கள் வனத்துறையின் அனுமதியின்றி சென்றுள்ளனர். கோடைக்காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் யாரையும் அனுமதிப்பதில்லை. அவர்கள் அனுமதியுடன் சென்றிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது'' என்றார்.

பன்னீர்செல்வம்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவரான துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, ''மலையேறும் பயிற்சிக்குச் செல்வதற்கு குரங்கணியிலிருந்து இரண்டு வழிகள் இருந்தாலும், ஒரு வழியைத்தான் வனத்துறையினர் அனுமதிப்பார்கள். குரங்கணி டாப் ஸ்டேஷனுக்கு மட்டும் அனுமதி உள்ளது. இவர்கள் அனுமதியில்லாத கொழுக்குமலை வழியாகச் சென்று இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்'' என்றார். ஆனால், வனத்துறையினர்மீது செய்தியாளர்கள் வைத்த குற்றச்சாட்டுக் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருவரும் சென்றனர்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கிளம்புகிற நேரத்தில் விகடன் சார்பாக அறிமுகப்படுத்திக்கொண்டு, ''தேனி மாவட்ட வனத்தில் அடிக்கடி தீப்பிடிப்பதற்கு காரணமே, அங்கு வனத்துறையினர் செய்யும் முறைகேடுகளை மறைக்கத்தான் என்ற புகார் எழுந்துள்ளதே'' என்றோம். ''இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, அப்படியெல்லாம் வனத்துறையினர் எந்தத் தவறும் அங்கு செய்யவில்லை'' என்று கூறிவிட்டுக் கிளம்பினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!