வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (13/03/2018)

கடைசி தொடர்பு:16:25 (13/03/2018)

`கூட்டத்தைப் பத்தி மட்டும் கேட்காதீங்க' - தினகரனின் மேலூர் கூட்டம் அப்டேட்!

மேலூர்

டி.டி.வி தினகரன் பல சட்டரீதியான சவால்களையும் அரசியல் போட்டிகளையும் தாண்டி ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்னரே பல அரசியல் மேடைகளில் தலைமை ஏற்று பேசினார். அதற்கு அச்சாரமிட்ட மதுரை மாவட்டம் மேலூரில்தான் தன் முதல் எம்.ஜி.ஆர் பொதுக்கூட்டத்தை மாநாடுபோல நடத்தினார். இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம், அவருக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தற்போது அதை மக்களிடையே அதிகாரபூர்வாக அறிவித்தும் தன் வெற்றியையும் பகிர்ந்துகொள்ள உள்ளார்.

மேலும், டி.டி.வி தினகரன் வருகிற 15-ம் தேதி தனது கட்சியின் பெயா் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அது தொடர்பாகக் கடந்த 11-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று அதன் கால்கோள்விழா மேலூர் எஸ்.பி.ஆர் மைதானத்தில் நடைபெற்றது. இந்நிலையில் கட்சி அறிமுக விழா நடத்த சில நாள்களே உள்ள நிலையில், பெரும் இரும்புக் கம்பிகளைக் கொண்டும் அலங்காரங்கள் கொண்டும் மேடை மற்றும் கட்சித் தொண்டர்கள் வெயில், மழையால் பாதிக்கப்படாத வகையில் வேலைப்பாடுகளைச் சுறுசுறுப்பாகச் செய்திவருகின்றனர்.

இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ சாமியின் நெருங்கிய வட்டாரம் நம்மிடம் கூறுகையில், "விழாவின் ஏற்பாடுகள் நேற்று முதல் தொடங்கியது 50-க்கும் மேற்பட்ட நபர்கள் பணிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் .

 

மேலூர்

மழை, வெயிலில் தொண்டர்கள் பாதிக்கக் கூடாது என்று எங்களுக்குத் தினகரன் அறிவுரை செய்துள்ளார். அதனால் தற்போது கொட்டகை போன்ற வடிவமைப்பில் இரும்பு தகரங்கள் கொண்டு மேடை அமைத்து வருகிறோம். வரும் 15-ம் தேதி காலை 9.15 மணிக்கே தினகரன் வந்துவிடுவார். கட்சிக்கொடியை 100 அடி கம்பத்தில் ஏற்றிய பின் சிறப்புரை வழங்கிவிட்டு 9.45 மணிக்கு கிளம்பிவிடுவார். அந்தக் கொடி மேலூரில் நிரந்தரமாக இருக்கும். அந்த இடம்கூட அண்ணன் ஆர்.சாமி பெயரில் வாங்கிவிட்டோம். முன்னாள் அமைச்சர்கள்  எம்.எல்.ஏ-க்கள் என முக்கிய நிர்வாகிகள் அவ்வப்போது பார்வையிட்டுச் செல்கின்றனர். மேலூரை மிகவும் ராசியாகத் தினகரன் நினைக்கிறார். எத்தனை பேர் கூட்டத்துக்கு வருவாங்க என்பது குறித்து இப்போது எதையும் சொல்ல முடியாது. சொன்னால் காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துவிடும்'' எனவும் தெரிவித்தனர் .