முதல்வர் அளித்த வாக்குறுதி! மும்பையை அதிரவைத்த விவசாயிகளின் பேரணி வெற்றி

மகாராஷ்ட்ரா அரசு, அகில இந்திய கிஸான் சாபா அமைப்பினரின் கோரிக்கையை ஏற்றதால் விவசாயிகள் பேரணி கைவிடப்பட்டது.

விவசாயிகள் பேரணி

மகாராஷ்ட்ராவையே திருப்பிப்பார்க்கவைத்த மாபெரும் விவசாயிகளின் பேரணி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சட்டசபையை முற்றுகை இடுவதற்காக மகாராஷ்ட்ராவின், நாசிக் பகுதியிலிருந்து மிக சாதாரணமாகத் தொடங்கிய இந்தப் பேரணி மும்பை நகரின் உள்ளே நுழையும்போது சுமார் 30,000 பேருடன் வந்தது. இந்தப் பெரிய கூட்டம் மகாராஷ்ட்ரா அரசுக்கு அதிர்ச்சியை அளித்தது. மேலும்
இதனால் நெருக்கடிகளும் அதிகமானது.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற பேரணி நேற்று ஆசாத் மைதானத்தை வந்தடைந்தது. விவசாயிகளின் மிகப்பெரிய பேரணியால் மிரண்ட அரசு, இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடிவு செய்து அதற்காக 6 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்குப் பின், நேற்று மாலை விவசாயச் சங்கத்தினரிடம் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பேரணியில் பங்கேற்றவர்களில் 90 சதவிகிதம் பேர் பழங்குடியினர். அவர்களுக்கு நிலம் இல்லாததால் வனப் பகுதியில் பயிரிட்டு வருகின்றனர். எனவே விவசாயிகளின் கோரிக்கை நியாயமானதாக உள்ளதால் அதை ஏற்க அரசுத் தயாராக உள்ளது. மிக விரைவில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார். மகாராஷ்ட்ரா அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!