வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (13/03/2018)

கடைசி தொடர்பு:18:33 (13/03/2018)

''ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை சட்டப்படி விடுதலை செய்யமுடியும்; ஆனால்...'' - என்ன சொல்கிறார் காங்கிரஸ் வேலுச்சாமி

ராஜீவ் காந்தி

''ராஜீவ்காந்தியைக் கொன்றவர்களை முற்றிலும் மன்னித்துவிட்டோம்'' என்று உருக்கமும் நெகிழ்வுமாகப் பேசியிருக்கிறார் ராகுல்காந்தி! இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பி.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தற்போதைய மத்திய பி.ஜே.பி அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலும், மலிவு விளம்பரம் தேடும் நோக்கிலும் பேசியிருக்கிறார் ராகுல்காந்தி!'' என்று பதிலடி கொடுத்திருக்கிறார். 

திருச்சி வேலுச்சாமிஇதையடுத்து, 'ராகுல்காந்தியின் பேச்சு உளப்பூர்வமானதா.... அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்டதா' என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் பலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசோ, ''இவ்விவகாரத்தில், சட்டப்படி செயல்படுவோம்'' என்று 'பாதுகாப்பான பதிலை' தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கின் பின்னணியில் மறைந்திருக்கும் சக்திகள் குறித்து, 'ராஜீவ் காந்தி கொலை... தூக்குக் கயிற்றில் நிஜம்!' என்ற தலைப்பில் ஏற்கெனவே புத்தகம் எழுதி வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியின் கருத்து பற்றி நம்மிடம் பேசினார்....

''இந்திய அரசியல் சட்டப்படி 'இப்படிப்பட்டக் குற்றவாளிகளை விடுவிப்பதற்கான அதிகாரம், மாநில அரசுக்கு 161- ம் விதியின் கீழ் உள்ளது'. 'இவர்கள் 7 பேரும் குற்றவாளிகள்' என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனை அனுபவித்துவரும் 7 பேரும், 'இந்தக் கொலைக் குற்றத்தில் எங்களுக்குச் சம்பந்தம் இல்லை' என்றுதான் இதுவரையிலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மகாத்மா காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டக் குற்றவாளியான கோபால் கோட்சே, 'ஆமாம்... நாங்கள்தான் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றோம். அது நியாயம்தான்!' என்றே பகிரங்கமாகச் சொன்னான். அப்படிப்பட்ட கோபால் கோட்சேவை சிறைத்தண்டனையிலிருந்து விடுதலை செய்தது மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்த அப்போதைய காங்கிரஸ் அரசுதான். சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்தபிறகும்கூட, 'காந்தியை ஏன் கொன்றோம்?' என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்ட கோபால் கோட்சே, அதனை நாடகமாகவும் வடிவமைத்து மும்பையில் அரங்கேற்றினார். இவை அனைத்தையும் இந்த நாடு அனுமதித்தது.

இவையெல்லாம் பழைய கதை என்றால், கடந்த 2017 ம் ஆண்டில் நடந்த உதாரணத்தைச் சொல்கிறேன்.... கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் உள்ள காங்கிரஸ் ஆட்சி, '14 ஆண்டுகள் கடந்தும் சிறையில் இருக்கக்கூடிய அனைத்துக் கைதிகளையும் இந்த அரசு விடுதலை செய்கிறது' என்ற ஒற்றை வரித் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதன்படி 1300-க்கும் மேற்பட்டக் கைதிகளை இரண்டு கட்டங்களாக விடுதலை செய்தனர். ஆக, கர்நாடக மாநிலத்துக்கு உள்ள இந்த உரிமை தமிழ்நாட்டுக்கும் பொருந்தும்தானே...? ஆனால், ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் குறித்து தீர்மானம் இயற்றிய ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு, '7 பேரை விடுவிடுப்பது குறித்து மத்திய அரசு, 3 நாள்களுக்குள் அனுமதி அளிக்கவேண்டும்; இல்லையென்றால், தமிழக அரசே இவர்களை விடுதலை செய்துவிடும்' என்று கூறி இவ்விஷயத்தில் புதிய சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இதையடுத்து, அப்போதிருந்த மத்திய காங்கிரஸ் அரசு, உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்கப்போக, இந்த வழக்கு இப்போதுவரை முடிவுக்கு வராமல், இழுபட வேண்டியதாகிவிட்டது. 

ராகுல்காந்தி

'7 பேரையும் விடுதலை செய்வதாகச் சொல்லி தமிழக வாக்கு வங்கியைக் கைப்பற்ற வேண்டும்; அதே சமயம், இவர்கள் 7 பேரும் சிறையை விட்டு வெளியிலும் வந்துவிடக் கூடாது' என்ற அரசியல் உள்நோக்கத்தோடு அன்றைக்கு ஜெயலலிதா எடுத்த முடிவுதான் இத்தனைக்கும் காரணம். 

'ராகுல்காந்தியின் மன்னிப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது' என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல. அவர் உளமார்ந்துதான் இந்த மன்னிப்பைத் தெளிவுபடுத்தியிருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன்....

சுதந்திரப் போராட்டக் காலத்தில், பிரிட்டிஷாரினுடைய அடக்குமுறையின் ஒரு பகுதியாக போராட்டக்காரர்கள் மீது போலீஸாரைக் கொண்டு காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, ஜவஹர்லால் நேருவின் மீது அடிவிழாமல் குறுக்கே புகுந்து தடுத்தவர் கோவிந்த வல்லபந்த். நாடு சுதந்திரமடைந்த பிறகு, நாட்டின் பிரதமராகிவிட்டார் நேரு. கோவிந்த வல்லபந்த், மத்திய அமைச்சராகிவிட்டார். ஒருமுறை நேருவிடம், 'அன்றைக்கு உங்களை போலீஸ் தாக்குகையில், நான் குறுக்கே புகுந்து தடுத்து அடி வாங்கினேன். ஆனால், அந்தச் சமயத்தில் நீங்களோ கண்களை இறுக மூடிவிட்டீர்கள். அது ஏன் என்று சொல்லமுடியுமா?' என்று கோவிந்த வல்லபந்த் கேட்டார். அதற்குப் பதில் கூறிய நேரு, 'அன்றைக்கு நம்மைத் தடி கொண்டு அடித்த அந்தக் காவலரும் இந்தியர்தானே.... எப்படியும் நம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்துவிடும். சுதந்திர இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பிலும் பங்கேற்போம்' என்ற நம்பிக்கை எனக்கு அப்போதே இருந்தது. எனவேதான், நம்மைத் தாக்கிய அந்தக் காவலரை நான் கண்களால் பார்க்கவில்லை; பார்த்திருந்தால் இப்போது பதவிக்கு வந்ததும் அந்தக் காவலரைத் தேடிக் கண்டுபிடித்து தண்டித்திருக்கும் சூழ்நிலைகூட ஏற்பட்டிருக்கும். இப்படியொரு சூழல் நேர்ந்துவிடக் கூடாது என்றுதான் நான் அன்றைக்குக் கண்களை இறுக மூடிக்கொண்டேன்' என்று பதிலளித்தார். நேருவின் நற்குணம் பொருந்திய அந்த 'ஜீன்' ராகுல்காந்திக்கும் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்'' என்று அழுத்தம் திருத்தமாகப் பேசி முடித்தார் திருச்சி வேலுச்சாமி! 


டிரெண்டிங் @ விகடன்