வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (13/03/2018)

கடைசி தொடர்பு:17:40 (13/03/2018)

ஆக்ரோஷமில்லாத `நாடோடி கணேசனு'க்கு திடீர் உடல் நலக்குறைவு! சிகிச்சை அளிக்கும் வனத்துறையினர்

வனத்துறையினர் சிகிச்சை

நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல், மிகவும் அமைதியான வகையில் சுற்றித்திரியும் யானைக்கு அவர்கள் இரண்டு பெயர்களைச் செல்லமாகச் சூட்டியுள்ளனர். ஒன்று ‘நாடோடி கணேசன்’, மற்றொன்று ‘எலியாஸ் கடை மக்னா’. பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமான இந்த யானைக்கு சுமார் 50 முதல், 70 வயது வரை இருக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ‘நாடோடி கணேசன்’ உடல் நலம் குன்றி நகர முடியாமல் இருந்ததை வனத்துறையினர் ரோந்துப்பணியின்போது  கவனித்துள்ளனர். வழக்கமாக சேரம்பாடி வனச் சரகத்துக்குட்பட்ட பகுதியில் சுற்றித்திரியும் இந்த யானை, வழக்கத்துக்கு மாறாக ஓவேலி வனச் சரகத்துக்குட்பட்ட பகுதியில் நகர முடியாமலும், நீர் அருந்த முடியாமலும் இருந்ததை வனத்துறையினர் கண்காணிப்பின்போது தெரியவந்துள்ளது. மேலும், அதன் வலது முன்னங்கால் வீங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட கூடலூர் வட்ட வன அலுவலர் திலீப் தலைமையில் வனத்துறையினர் யானைக்கு தேவையான உணவையும், தண்ணீரையும் வழங்கி, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து வன அலுவலர் திலீப் கூறுகையில், “வயோதிகம் காரணமாக யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்க கூடும். கால் வீங்கியுள்ளதால், வாதமாககூட இருக்கலாம். இந்த யானை இதுவரை பொதுமக்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக செய்தியில்லை. இதற்கு சுமார் 70 வயது இருக்கலாம் என இப்பகுதி மக்கள் சொல்கின்றனர்”என்றார். கூடலூர் வனச் சரகர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “யானையின் அருகில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை செய்து வருகிறோம். யானையை பொதுமக்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க அதன் வழித்தடத்தில் வனக் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது, தீவிர கண்காணிப்பில் உள்ள ‘நாடோடி கணேசன்’, கொடுக்கப்படும் தீவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக உண்ண தொடங்கியுள்ளான். எழுந்து நான்கைந்து அடிகள் நடக்கவும் செய்தான். இன்று வனத்துறை கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கவுள்ளோம்”என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க