வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (13/03/2018)

கடைசி தொடர்பு:18:00 (13/03/2018)

`தினம்தினம் சாவதைவிட கருணைக் கொலை செய்யுங்கள்' - குவாரிக்கு எதிராகக் கொந்தளிக்கும் கிராம மக்கள்

''கல்குவாரியால் எங்கள் மக்கள் நிதம் நிதம் சாகிறார்கள். குவாரியின் ஏலத்தை ரத்து செய்யுங்கள், இல்லையென்றால் மாவட்ட நிர்வாகமே எங்களைக் கருணைக் கொலை செய்யட்டும்'' என்று கிராம மக்கள் திரண்டு கலெக்டரிடம் மனுகொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

குவாரி

புகார் கொடுத்த சிலரிடம் பேசினோம். ''எங்கள் பகுதியில் இருக்கும் கிரஷர் மற்றும் குவாரிகளால் நாங்கள் தினம் தினம் சோற்றுக்குப் பதிலாக மண்ணை உண்கிறோம். எங்கள் குழந்தைகள் பலவிதமான நோய்களால் அவதிப்படுகிறார்கள். தட்டிக்கேட்க வேண்டிய அதிகாரிகள் பணத்தை வாங்கிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை. கடைசியாக ஆட்சியரிடம் வந்திருக்கிறோம்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுக்கா, இரூர், நாட்டார்மங்களம், ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தனூர் கிராமப் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். போராட்டக்காரர்களிடம் பேசினோம். நாட்டார்மங்களம், கூத்தூர், கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  வசித்து வருகிறோம். இப்பகுதியில் ஏற்கெனவே இயங்கிவரும் கல் குவாரிகளால் எங்கள் ஊரிலுள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்தக் குவாரிகளில் வெடிவைத்து பாறைகளைத் தகர்க்கும்போது, மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படுவதுமட்டுமல்லாமல். பல பெண்களுக்கு கருச்சிதைகள் ஏற்படுகிறது. மக்களில் பலருக்கு நோய் நொடிகள் அதிகரித்துகொண்டே இருக்கிறது. இதேநிலை நீடித்தால் சிலஆண்டுகளில் கூத்தனூர் கிராமமே அழிந்துவிடும்.

குவாரி

இதில் நாட்டார்மங்கலம் ஊராட்சி எல்லையில் அரசுப் புறம்போக்கு மலையை மாவட்ட நிர்வாகம் கடந்த பிப்ரவரி 20-ம்தேதி ஏலம்விடத் திட்டமிட்டிருந்த நிலையில், பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இந்த ரத்து செய்யப்பட்ட தகவலைக் கேட்டு கூத்தனூர் கிராமமே சந்தோஷத்தில் வெடி வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்தது. ஆனால், இன்று (13.3.2018) மீண்டும் கல்குவாரிகள் ஏலம் நடத்தப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. இது எங்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்குவாரியால் எங்கள் மக்கள் நிதம் நிதம் சாகிறார்கள். கல்குவாரியின் ஏலத்தை ரத்து செய்யுங்கள். இல்லையென்றால் மாவட்ட நிர்வாகமே எங்கள் மக்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள். 13-ம் தேதியில் ஏலம்விட்டால் ஒரு சில ஆண்டுகளில் அழியவுள்ள எங்கள் கிராமம், ஒருசில மாதங்களிலேயே அழிந்துவிடும். சில அதிகாரிகளின், சில முதலாளிகளின் சுயலாபத்துக்காக ஒருகிராமத்தையே அழிக்க நினைப்பது சரியா. இதற்கு இந்த அதிகாரிகளும் துணை போவது சரியா. எங்களது கோரிக்கையை மீறி ஏலம்விட முடிவு செய்தால், தயவுசெய்து எங்கள் கிராம மக்களைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்'' என்று கொந்தளித்தார்கள்.