வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (13/03/2018)

கடைசி தொடர்பு:17:50 (13/03/2018)

`போலீஸ்ன்னா நாயா... பிச்சைக்காரனா?' - வி.ஐ.பி-யைப் பாதுகாக்க சாலையோரத்தில் படுத்துறங்கிய காவலர் ஆதங்கம்

`போலீஸ்ன்னா நாயா இல்ல பிச்சைக்காரனா' என்று வாட்ஸ்அப்பில் போலீஸ்காரர் ஒருவர் ஆதங்கமாகப் பேசும் ஆடியோ வைரலாகிவருகிறது. 

வாட்ஸ்அப்

அந்த ஆடியோவில், "ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் வணக்கம், ஒரு வி.ஐ.பி-யின் பாதுகாப்புப் பணிக்காகக் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தோம். சம்பந்தப்பட்ட வி.ஐ.பி எங்களுக்கு போலீஸ் பாதுகாப்புத் தேவையில்லை என்று கூறிவிட்டார். ஆனால், போலீஸ் அதிகாரிகள் எங்களை அங்கேயே பாதுகாப்புப் பணியில் இருக்கும்படி தெரிவித்துள்ளார். இதனால், ஹோட்டல் வாசல் முன்பு வாகனத்தைக்கூட நிறுத்த வசதியில்லாமல் நிறுத்திவிட்டு நடுரோட்டில் நிற்கிறோம். 10 வது மாடியிலிருக்கும் வி.ஐ.பி-க்கு எதற்கு நடுரோட்டில் பாதுகாப்புக்காகப் போலீஸார் நிற்க வேண்டும். இந்த ஹோட்டலில் பாதுகாப்புப் பணிக்கு வரும் போலீஸாருக்கு இருந்துவருகிறது. 
இந்தப் பிரச்னை இந்த ஹோட்டலில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, `காவல்துறையிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. தங்குவதற்கு ஏற்பாடு செய்யும்படி தெரிவித்தால் ஏற்பாடு செய்துதருகிறோம்' என்று தெரிவித்துவிட்டனர்.

போலீஸ்ன்னா பிச்சைக்காரனா... இல்ல நாயா... ஹோட்டல் நிர்வாகம், வி.ஐ.பி-யைத் தங்கவைத்து பணம் சம்பாதிக்கிறது. அதற்கு நாங்கள் பாதுகாப்புக் கொடுக்கிறோம். இரவு நேரத்தில் பணி முடிந்து எப்படி போலீஸார் வீட்டுக்குச் செல்வார்கள். எனவே, இதை எல்லோருக்கும் ஷேர் செய்யுங்கள். நியாயம் கிடைக்க வேண்டும்'' என்பதோடு அந்த ஆடியோ முடிவடைகிறது.

தனியார் ஹோட்டலில் மட்டுமல்ல, சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம்மீது சில ஆண்டுக்கு முன்பு தாக்குதல் சம்பவம் நடந்தது. இதனால், சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் இடம் மாற்றப்பட்டார். இதையடுத்து தூதரகம் அருகில் உள்ள அண்ணா மேம்பாலத்தின் மேல் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலில் அவர்கள் அங்கு மணிக்கணக்கில் நிற்கின்றனர். இதுபோல, பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்படும் பெண் போலீஸாரின் நிலைமை அந்தோ பரிதாபம். நடமாடும் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அதுவும் சரிவர செயல்படுவதில்லை. அவசர தேவைகளைக்கூட சமாளிக்க முடியாமல் தினந்தோறும் அல்லல்படுகின்றனர். இதையெல்லாம் தமிழக காவல்துறை உயரதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்பது பாதிக்கப்படும் போலீஸாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.