வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (13/03/2018)

கடைசி தொடர்பு:19:00 (13/03/2018)

`பல நாள்களில் 30 ரூபாய் லாபமும் கிடைக்காது' - 80 வயது தாயைச் சுமக்கும் மாற்றுத்திறனாளி

மூளை காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்பில் தன் உடல் வளர்ச்சி குறைப்பட்ட  நிலையிலும் இன்றும் பலூன் விற்று தன்னோடு தன் தாயையும் சேர்த்து பார்த்துக்கொண்டு வாழ்க்கையில் உயர்ந்து நிற்பதோடு தாயுமாணவனாகவும் விளங்கி வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர்.

 30 ரூபாய்

தஞ்சாவூர் குருவிக்காரத் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். 47 வயதுடைய இவர் தனது 13 வயதில் இருந்து பலூன் விற்று பிழைப்பு நடத்துவதோடு, தன் அம்மாவையும் இவரே பார்த்து வருகிறார். அவர் வீட்டுக்குச் சென்றோம். மிகச்சிறிய குடிசை வீட்டில் தன் அம்மாவோடு வசித்து வருகிறார். சிறிய மண்ணெண்ணெய் விளக்கு அந்தச் சிறிய வீட்டில் வெளிச்சத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது. விளக்கின் அருகில் பலூன்கள் மற்றும் தட்டைகள் சிதறிக் கிடந்தன. இவை அனைத்தும்தான் நாளைக்கு எங்கள் வயிற்றை நிரப்பப்போகின்றன என்றவாறே அவற்றைத் தயார் செய்வதில் மும்முரமாக இருந்தார். அவருக்கு வேண்டிய உதவிகளை அவர் அம்மா திருவாயி செய்துகொண்டிருந்தார்.

சொக்கலிங்கத்திடம் பேசினோம். "நான் சின்ன பையனா இருக்கும்போது நல்லா ஓடியாடி விளையாடுவேன்னு அம்மா சொல்லும். எனக்கு ஏழு வயசு இருக்கும்போது உடம்பு சரியில்லாமல் போய் கடுமையான காய்ச்சல். அம்மா என்னைத் தூக்கிக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலையா அலைஞ்சிச்சு. ஆனாலும் நோவு சரியாகவில்லை.

சொக்கலிங்கம்

அப்புறம் ஆஸ்பத்திரியிலேயே தங்க வைத்து பார்த்தார்கள். அப்பதான் எனக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அந்தச் சமயத்தில் இருந்த டாக்டர் ஒருத்தர் கலங்கி நின்றுகொண்டிருந்த என் அம்மாவிடம் மூளையில் சின்னதா ஒரு ஆபரேஷன் செஞ்சா எல்லாம் சரியாகிடும் எனச் சொன்னார். அப்பதான்  அம்மா லேசா சிரிக்க ஆரம்பிச்சுச்சு. டாக்டர் சொன்னது போலவே ஆபரேஷன் நடந்துச்சு. காய்ச்சல் நின்னுடுச்சு. எனக்கு ஆபரேஷன் செய்த டாக்டருக்கு பாராட்டி பட்டமெல்லாம் கொடுத்தாங்கடா என அம்மா அடிக்கடி சொல்லும். காய்ச்சல் நின்ன என்னை அம்மா சந்தோஷமாக இடுப்பில் உட்கார வச்சுக்கிட்டு நடந்தே வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்துச்சு.

அதற்கு முன்னாள் ஓடியாடி திரிந்த என்னால் அதுபோல் இருக்க முடியவில்லை. என் உடம்பில் மற்றவர்களைப்போல் வளர்ச்சி இல்லாமல்  பாதிக்கப்பட்டது. இதனால் பல வருடங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தேன். என் அண்ணன்களைப்போல் நான் இல்லையே என அம்மா எப்பவுமே என்னை நினைத்தே கவலைப்படும். அம்மாவுக்காகயாவது நான் எதாவது செய்ய வேண்டும் என நினைத்த நான், வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து பலூன் வாங்கி விற்க ஆரம்பித்தேன். அப்போ எனக்கு 13 வயசு இருக்கும். அதுல கொஞ்சம் காசுதான்  கிடைத்தாலும் எனக்கு மகிழ்ச்சியா இருந்துச்சு. அன்றைக்கு ஆரம்பிச்சது இன்று வரை எனக்கு மட்டும் இல்ல என் அம்மாவுக்கும் சேர்த்து சோறு போடுது" என்றவர் தொடர்ந்தார்.

சொக்கலிங்கம்

"ஆரம்பத்தில் அம்மாவிடம் காசு வாங்கிக்கொண்டு கடைக்குச் சென்று பலூன் வாங்கி அதை ஊதி, பின்னர் கோயில் மற்றும் குழந்தைகள் கூடும் பகுதிகள்ல விற்பேன். இதில் பெரிய அளவில் காசு கிடைக்காது. ஆனாலும், அம்மாகிட்ட வாங்கிய காசை திருப்பிக் கொடுத்துவிட்டு மீதி இருக்கும் காசில் அடுத்தடுத்த நாள்கள் பலூன் வாங்கி விற்க ஆரம்பித்தேன். கிடைக்கும் காசை அம்மாவிடம் கொடுப்பேன். என்மீது அம்மாவுக்கும் கொஞ்சம்  நம்பிக்கை வந்துச்சு. அப்புறம் காலங்கள் கடந்துச்சு. எல்லா அண்ணன்களுக்கும் கல்யாணமாகி தனிக் குடித்தனம் போயிட்டாங்க. அவங்க குடும்பத்தைக் கவனிப்பதற்குத்தான் அவங்க சம்பாதிப்பது சரியா இருந்துச்சு. எங்களை கவனிக்க முடியலை. நானும் அம்மாவும் ரொம்பவே கஷ்டப்பட்டோம். அப்புறம் சும்மா வெறும் பலூனை ஊதி விற்றால் வேலைக்கு ஆகாது. இதில் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.

காட்டுப் பகுதிகளில் இருந்து தட்டைகளை எடுத்துவந்து அதை  நறுக்கி அதில் பீப்பி வைத்து அதை ஊதிய பிறகு பீப்பி சவுண்ட் வருவதுபோல் செய்து விற்க ஆரம்பித்தேன். சின்னக் குழந்தைகள் எல்லாம் மாமாகிட்ட பலூன் வாங்கிக் கொடு எனச் சொல்லும்போது மகிழ்ச்சி அடைவேன். காசு இல்லைன்னு சொன்னாலும் சும்மாவே பலூனைக் கொடுத்துவிடுவேன். எல்லா செலவும்போக முப்பதிலிருந்து 50 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். பல நாள்கள் அதுவும் இருக்காது. கிடைக்கிற காசை அப்படியே அம்மாவிடம் கொடுப்பேன். அது எல்லா செலவையும் பார்த்துக்கொள்வதோடு பலூன் விற்க அலையுற எனக்கு நல்ல சாப்பாடும் கொடுக்கும். விளையாட்டா பலூன் விற்க ஆரம்பித்தேன். அது இன்று என் அம்மாவுக்கும் சேர்த்து சோறு போடுது. இருபத்தியைந்து வருடத்துக்கு மேல் எனக்கு இதுதான் வாழ்க்கை. உடலில் வளர்ச்சி குறைபாட்டால் என் வாழ்க்கையில் வளர்ச்சி இல்லாமல்போனது. வர வருமானத்தை வைத்து என் அம்மாவ சந்தோஷமா வச்சிருக்கேன். இதையே என் வாழ்க்கையில் வரமாகவும் மகிழ்ச்சியாகவும் பார்க்கிறேன்" என நெகிழ்ச்சியோடு திக்கித் திணறி சொன்னார்.

அம்மா திருவாயி, "எம் புள்ளை என்ன ஆகுமே என நினைத்து கவலைப்பட்டேன். இன்றைக்கு எனக்கே சாப்பாடு போடுறான். நான் மத்த பிள்ளைகள நம்பினேன், யாரும் என்னைக் கண்டுக்கல. இவனுக்கு சொக்கலிங்கம் எனப் பேர் வச்சேன். ஆனா சொக்கத் தங்கமா என்னைய பார்த்துக்கிறான். இவனுக்கு உடம்பில் வளர்ச்சி இல்லை. ஆனால் அன்பால் உயர்ந்து நிற்கிறான். எனக்கு ஒரே ஒரு கவலைதான். இப்பவே எனக்கும் 80 வயசுக்கு மேல ஆகிடுச்சு. எனக்குப் பிறகு, என் மவனை யார் பார்த்துக்க போறார்ன்னு நினைக்கிறப்பதான் கவலையா இருக்கு. அவனால் முன்ன மாதிரி அழையவும் முடியலை. அரசாங்கம் ஏதாவது உதவி செய்து அவனுக்கு சின்னதா கடை வைத்துக் கொடுத்து உதவி செய்தால் அதை வச்சு அவன் பொழச்சுக்குவான்" எனத் தாயிக்கே உரிய தவிப்போடு கூறுகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க