வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (13/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (13/03/2018)

வெயிலில் உரிந்த கால்கள்... கண் கலங்கவைத்த மகாராஷ்ட்ரா விவசாயிகள்

காராஷ்ட்ராவில் விவசாயிகள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. முதன்முறையாக மகாராஷ்ட்ர அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்து வழியாக உறுதி மொழி அளித்துள்ளது. கடன் தள்ளுபடிக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து, நாசிக்கிலிருந்து 6 நாள்கள் நடந்தே மும்பைக்கு 35,000 விவசாயிகள் வந்தடைந்தனர். அப்படி வந்தவர்களில் பெரும்பாலோனோர் கால்களில் காலணி அணிந்திருக்கவில்லை. சிலரோ பிய்ந்த காலணியை அணிந்திருந்தனர். இன்னும் சிலரோ செருப்புக் காலணியோடு பயணத்தைத் தொடங்கி முடிக்கும்போது வெறுங்காலால் முடித்தனர். 

விவசாயிகள்

சுமார் 180 கிலோ மீட்டர் தூரம் நடந்து மும்பை வந்தவர்களிடம் மும்பை மக்கள் பெரும் அன்பு காட்டினர். டப்பாவாலாக்கள் உணவு அளிக்க பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மும்பையில் விவசாயிகள் தங்கிய தினங்களில திருமணம், ஹோட்டல்களில் எஞ்சிய உணவுகளை டப்பாவாலாக்கள் சேகரித்து உணவளித்தனர். மும்பை வரும் விவசாயிகள் காய்ந்த வயிறுடன் நடக்கக் கூடாது என்பதற்காக ஆங்காங்கே மும்பையின் பிரத்யேக உணவான வடபாவு வைக்கப்பட்டிருந்தது. அதோடு, ஸ்நாக்ஸ், குடிநீர் பாட்டில்கள் கொடுக்கப்பட்டன. வழியெங்கிலும் விவசாயிகளுக்கு உதவுவதற்காகச் சிறப்பு மருத்துவக் குழுவினரும் முகாமிட்டிருந்தனர். பேரணியில் பங்கேற்றவர்களில் அதிகமானோர் 60 வயதை எட்டியவர்கள்.

கொடும் வெயிலில் உரிந்த கால்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். ஏற்கெனவே, போக்குவரத்தில் சிக்கித் திணறும் மும்பை நகருக்குள் 35,000 நடைப்பயணம் நடத்தினாலும் எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் பேரணி நிறைவுற மும்பை போலீஸ் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மும்பையில் விக்டோரியா டெர்மினஸ் ரயில் நிலையம் அருகேயுள்ள ஆசாத் மைதானத்தில் விவசாயிகள் தங்கினர். இங்கும் மருத்துவக் குழுவினர் விவசாயிகளுக்கு சிகிச்சை அளித்தனர். 

விவசாயிகளிடம் மும்பை மக்கள் காட்டிய பரிவு விவசாயிகளின் கண்களிலிருந்து நீர் சொரிய வைத்தது. அகில இந்திய கிஷான் சபா இந்த நடைப்பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க