பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவும் பாலிகீட்ஸ் புழுக்கள்... சட்டவிரோதமாகச் சேகரிக்கும் கும்பல்!

டல்வாழ் உயிரினங்களின் பல் உயிர் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் பாலிகீட்ஸ் (Polychaete) புழுக்கள் அபகரிக்கப்பட்டுக் கடத்தப்படுவதால் கடலோர நிலப்பகுதிகளின் வளம் அழியும் நிலை உருவாகியுள்ளது.

பாலிகீட்ஸ் புழுக்கள்

மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினைப் பகுதிகளின் கரையோரங்களில் மாங்குரோவ் செடிகள் நிறைந்த சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. கடல் சீற்றங்களின் போது எழுந்து வரும் பெரும் அலைகளை இவை தடுப்பதால் இதனை அலையாத்திக் காடுகள் எனவும் அழைக்கிறார்கள். கடற்கரையோரப் பகுதிகளை கடல் அரிப்பிலிருந்து பாதுகாத்து வரும் இத்தகைய காடுகள் நிறைந்த பகுதியில் இருக்கும் சதுப்பு நிலங்களில்தான் ஓர் அதிசய உயிரினம் இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களின் பல் உயிர் பெருக்கத்துக்கு உதவி வரும் 'பாலிகீட்ஸ்' எனப்படும் மண் புழுக்கள் இங்கு நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் புழுக்களை கடலின் சேற்று பகுதியில் வளரும் இறால் உள்ளிட்ட மீன் இனங்களும், சில பறவை இனங்களும் உணவாக உட்கொண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. மேலும் இவை சதுப்பு நிலப்பரப்பின் மண் வளத்தையும் பாதுகாத்து வருகின்றன.

இந்நிலையில், பாம்பன் கடலோரக் கிராமப் பகுதிகளான சின்னப்பாலம், குந்துகால், தெற்குவாடி மற்றும் தொண்டி ஆகிய இடங்களில் அதிக அளவில் காணப்படும் இந்த பாலிகீட்ஸ் புழுக்களைச் சட்டத்திற்குப் புறம்பாகச் சேகரித்து வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதியிலிருந்து இங்கு வரும் வியாபாரிகள் சிலர் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்த சிலரின் துணையுடன் பாலிகீட்ஸ் புழுக்களை தோண்டி எடுத்து விற்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலோர பகுதி

இதற்கென சின்னப்பாலம் கடலோரப் பகுதியில் முகாமிட்டுள்ள இவர்கள் நாள் தோறும் காலை முதல் மாலை வரை சிறிய மண்வெட்டிகள் மூலம் இந்தப் புழுக்களை உயிருடன் சேகரித்து வருகின்றனர். கடற்கரையோரச் சதுப்பு நில மணல் பகுதியில் நிறைந்திருக்கும் பாலிகீட்ஸ் புழுக்களை உயிருடன் தோண்டி எடுத்து பிளாஸ்டிக் கேன்களில் எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் புழுக்கள் வெளிமாவட்டங்களில் வளர்க்கப்படும் பண்ணை இறால்களுக்கு உணவாக விற்பனை செய்யப்படுகின்றன. 

சதுப்பு நிலப்பரப்பில் உள்ள பாலிகீட்ஸ் புழுக்களை எடுப்பது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி குற்றம் இல்லை என்றாலும் கடலோரப் பகுதிகளில் உள்ள அவற்றின் வாழ்விடங்களைச் சேதப்படுத்துவது குற்றத்துக்கு உரிய செயலாகும். மேலும், கடற்கரை வளத்தினையும் கடல்வாழ் உயிரினங்களின் வளர்ச்சியையும் பாதுகாக்கக் கூடிய இத்தகைய பாலிகீட்ஸ் புழுக்களை மீனவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு சட்ட விரோதமாக அபகரித்துச் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இப்புழுக்களின் அவசியம் குறித்து மீனவர்களிடையே விழிப்புஉணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலிகீட்ஸ் புழுக்கள்

இது குறித்து நம்மிடம் பேசிய வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர், ''கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது எனத் தடை உள்ளது. இந்நிலையில் பாலிகீட்ஸ் புழுக்களைச் சேகரிப்பதன் மூலம் அவற்றின் வாழ்விடங்கள் சேதத்திற்குள்ளாவதுடன், கரையோரங்களில் வாழும் நண்டு உள்ளிட்ட உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் புழு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களை எச்சரிக்கை செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!