வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (13/03/2018)

கடைசி தொடர்பு:15:59 (14/03/2018)

'இந்த நோய் லட்சத்தில் நான்கு பேருக்கு வரக்கூடியது!'- சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய அரசு டாக்டர்கள்

குலியன் பார்ரி சிண்ட்ரோம் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்குச் சிகிச்சை அளித்து அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.  
 

சிறுவன் ராஜ்குமாருடன் மருத்துவர் குழு

 

அரசு மருத்துவமனை என்றாலே, அங்கு சிகிச்சை சரிவர இருக்காது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. உயிர்க்கொல்லி நோயிக்கு சிகிச்சை அளிக்க உபகரணங்கள் அங்கு இருக்காது என எண்ணி, வசதியில்லாத மக்கள்கூட கடன் வாங்கி, தனியார் மருத்துவமனைக்குச் சென்று பல லட்சங்கள் செலவு செய்யத் தயாராக இருக்கின்றனர். அந்த நம்பிக்கையற்ற நிலையைப் போக்கி அரசு மருத்துவமனையிலும் அதிநவீன சிகிச்சைகளைச் செய்கிறோம் என்பதை நிரூபித்துள்ளார்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர்கள்.

திருவண்ணாமலை அடுத்த சாத்தனூர் அணைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ் - லட்சுமி தம்பதியினரின் 11 வயது மகன் ராஜ்குமார். தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென ராஜ்குமார் மயங்கி விழுந்திருக்கிறார். உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அடுத்தடுத்த நாள்களில் இது தொடர்கதையாகியிருக்கிறது. `எதையோ பார்த்து பயந்து மயங்கி விழுந்து இருக்கிறான் அதனால் தான் ஜுரம் வந்து இருக்கு, சாமியை வேண்டிக்கிட்டு மந்திரிச்சா சரியா போய்டும்’ என்று ஊர்மக்கள் சொல்ல, அதை நம்பி அப்படியே செய்திருக்கின்றனர் ராஜ்குமாரின் பெற்றோர்கள். 2 நாள்கள் மந்திரிச்சும் ராஜ்குமாருக்கு ஜுரம் நிக்கவில்லை. மாறாக, இரண்டு கால்களும் செயல்படாமல் போனது. அதன்பின்னர் சாத்தனூரில் உள்ள கிளினிக்கு ராஜ்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவம்  பார்த்தவர்கள், `இது என்ன வியாதினு கண்டுபிடிக்க இங்கு வசதியில்ல, நீங்க பெரிய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டு போய்டுங்க’ என்று கூறி அனுப்பியுள்ளனர். அங்கிருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் வந்து சேர்த்ததும், அங்கு சோதனை செய்தபோதுதான் தெரியவந்துள்ளது ' குலியன் பார்ரி சிண்ட்ரோம்' என்ற அரியவகை நோய் ராஜ்குமாருக்கு இருப்பது.  

சிறுவன் ராஜ்குமாருக்கு மருத்துவம் பார்த்த குழந்தைகள் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் தேரணிராஜனிடம் பேசினோம். ``கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி இரண்டு கால்களும் வரவில்லை, பல்ஸ் வேகமாகக் குறைந்து வருகிறது என்று அவசரப் பிரிவில் அட்மிட் செய்யப்பட்டான் இந்தச் சிறுவன். அவனை பரிசோதனை செய்த போது, ' குலியன் பாடி சிண்ட்ரோம் என்ற நோய் தாக்கியுள்ளது தெரிந்தது. இந்த நோய்க்கான மருந்து மருத்துவமனையில் இல்லை. விலையும் அதிகம். உடனே மருத்துவமனை டீன் சாந்தி மேடத்திடம், சிறுவனின்  நோய் குறித்து பேசி, அதற்கு, 'IV IG- ஹீமோகுளோபின் (hemoglobin) ஊசியைப் போடவேண்டும். அந்த மருந்து நம்மிடம் இல்லை, வெளியில்தான் வாங்க வேண்டும். ஓர் ஊசியின் விலை ரூ.1.5 லட்சம் ஆகும், உடனே வாங்கி போட்டால்தான் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியும். நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது, பல்ஸ் வேகமாகக் குறைந்து வருகிறது என்ற விவரத்தைச் சொன்னேன். உடனே சாந்தி மேடம், 'முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அந்த ஊசியை எவ்வளவு சீக்கிரம் வரவழைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரவழைத்துப் போடுங்கள்' என்றார்.

இதையடுத்து அந்த ஊசியை உடனே ஆர்டர் செய்து சிறுவனுக்குப் போட்டோம். போட்ட கொஞ்ச நேரத்தில் மூச்சு விட முடியாமல் திணறினான். அன்று முதல் 16 நாள்கள் தொடர்ந்து வென்டிலேட்டர்( ventilator therapy) மூலம் சுவாசம் கொடுத்தோம். இப்பொழுது சிறுவனின் உடல் 90 சதவிகிதம் குணமடைந்துவிட்டது. நன்றாக நடக்கிறான். இன்னும் 15 நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றால் பூரண குணமடைந்துவிடுவான். அப்பொழுது நடை பயிற்சி அளிப்போம்’’ என்றார் பூரிப்போடு. 

மேலும், அவரிடம் நோய் குறித்து கேட்டபோது, ``குலியன் பாடி சிண்ட்ரோம், இது மிக மோசமான டிசீஸ். இந்த நோய் லட்சத்தில் மூன்று அல்லது நான்கு நபர்களுக்கு மட்டுமே வரக்கூடியது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரும். இந்த நோயின் தாக்கம் முதுகுத் தண்டில் ஏற்படக்கூடியது, முதுகுத் தண்டிலிருந்து கை, கால்களுக்குச் செல்லும் நரம்புகளை ஒவ்வொன்றாக இந்த நோய் செயலிழக்கச் செய்யும். இந்த நோய் வர முக்கியக் காரணம் ' நம் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி( antibiotic) நோய் வராமல் தடுக்கக்கூடிய ஹீமோகுளோபின், ரிவேர்ஸ்ஸாகச் செயல்படத் தொடங்கிவிடும். அதாவது, நோயை உண்டாக்கக்கூடிய ஹீமோகுளோபினாக மாறிவிடும். அப்படி வரும் நோய்தான் குலியன் பாடி சிண்ட்ரோம் என்றார். இதுகுறித்து  மருத்துவமனை டீன் சாந்தியிடம் பேசினோம், ``இந்த நோய் மிகக் கொடியது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்திருந்தால் 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகியிருக்கும். அரசு மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷலிட்டி டாக்டர்கள் இருக்கிறார்கள். அரசு மருத்துவமனை என்று அலட்சியம் பார்க்கவேண்டாம்’’ என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க