ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

நெல்லையில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து!

நெல்லையில் கடந்த இரு தினங்களாகப் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளிக்கிறார்கள்.

குற்றாலம்

நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் மே மாதத்தில் தொடங்கும் சீசன் ஜூலை மாதம் வரை நீடிப்பது வழக்கம். இந்த ஆண்டு தொடர்ச்சியாகப் பெய்த மழையின் காரணமாக அக்டோபர் மாதம் வரையிலும் அருவிகளில் தண்ணீர் விழுந்தது. அதனால், சீசன் முடிந்த பிறகும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக ஐயப்ப சீசன் சமயத்தில் கோயிலுக்குச் செல்பவர்களும் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். 

கடந்த இரு மாதங்களாக குற்றால அருவிகள் முழுமையாக வறண்டு காணப்பட்டன. மெயின் அருவி மட்டும் அல்லாமல், ஐந்தருவி பழைய குற்றாலம், புலி அருவி என அனைத்து அருவிகளும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்தன. குற்றாலம் பகுதியில் வாட்டி வதைத்த வெயில் காரணமாக, பாறைகளின் வெப்பம் சுற்றுப்புறத்தையும் அதிக வெப்பமாக்கியது. அதனால் குற்றாலம் பகுதிக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை முழுமையாகக் குறைந்துவிட்டது. 

இந்த நிலையில், வங்கக் கடலின் தென் மேற்குப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, குமரி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்வதால் தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் குளிர்ச்சியாகக் காணப்பட்டன. அத்துடன், குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத் தொடங்கியிருக்கிறது. 

மெயின் அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் குளித்து வருகிறார்கள். அத்துடன் அருவிகளுக்குத் தண்ணீர் வரத்தொடங்கிய தகவல் கிடைத்ததால் நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மக்கள் ஆர்வத்துடன் குளிக்கச் செல்கிறார்கள். ஐந்தருவியின் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டுவதுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலை உருவாகியிருபப்து சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!