`பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு’ - பாலத்தை கடக்க முடியாமல் காத்திருக்கும் கப்பல்!

 இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையினால் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் இழுவைக் கப்பல் ஒன்று குந்துக்கால் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு இலங்கை - மாலத்தீவு இடையே உள்ள இந்திய பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது திருவனந்தபுரத்திற்கு தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் 390 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருக்கும் இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக்கடலை நோக்கி நகர்வதால் தென்மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பாம்பன் கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இழுவை கப்பல்

இதனிடையே தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடலூர் துறைமுகத்திற்கு பாம்பன் பாலம் வழியாகச் செல்ல இழுவைக் கப்பல் ஒன்று பாம்பன் கடல் பகுதிக்கு வந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்தக் கப்பல், பாலத்தினை கடந்து செல்ல துறைமுக அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் குந்துக்கால் கடல் பகுதியில் இந்தக் கப்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 
 கடந்த 2014-ம் ஆண்டு பாம்பன் பாலத்தை கடக்க இருந்த கப்பல் ஒன்று காற்றின் வேகத்தினால் இழுத்துச் செல்லப்பட்டு ரயில்பாலத்தில் மோதியதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது பாலத்தினை கடக்க கப்பலுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!