வெளியிடப்பட்ட நேரம்: 22:35 (13/03/2018)

கடைசி தொடர்பு:22:35 (13/03/2018)

‘ஏதோ ஒரு செயல்திட்டம்’... மத்திய அரசின் காவிரி அதிர்ச்சி!

காவிரி

காவிரி ஆற்று நீர் விவகாரத்தில் கர்நாடகத்தின் பக்கம் மத்திய அரசு சாய்ந்தாட, அதைக் கண்டித்து தமிழகத்தின் நலனைக் காப்பாற்ற எதையும் செய்யாமல் அதிமுக அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்று பல கட்சிகளும் விமர்சித்துத் தள்ளுகின்றன. 

காவிரி ஆற்று நீர்ப் பங்கீடு தொடர்பாக கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் உச்ச நீதிமன்றம்வரை சென்றும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. 1991 ஜூனில் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வெளியிடப்பட்டது. 2007 பிப்ரவரியில் அதன் இறுதித்தீர்ப்பு வெளியானது. அதை எதிர்த்து, கர்நாடகம் உட்பட்ட மாநில அரசுகள் மேல்முறையீடு செய்தன. அதில் கடந்த 16ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு கர்நாடகம் 177.25 டிஎம்சி காவிரி நீரைத் திறந்துவிடவேண்டும்; இதைச் செயல்படுத்துவதற்கான ‘ஒரு திட்டத்தை’ ஆறு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கெடு விதித்தது. 

இத்தீர்ப்பை உடனடியாகச் செயல்படுத்துமாறு தமிழ்நாட்டில் உள்ள விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் மாநில அரசை வலியுறுத்தின. முக்கிய எதிர்க்கட்சியான திமுக, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தது. அதைத் தொடர்ந்து, அரசே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. அதையேற்று திமுக அதன் சார்பில் நடத்தவிருந்த கூட்டத்தை ரத்துசெய்து, 

பிப்.22 அன்று நடத்தப்பட்ட அரசின் கூட்டத்தில் பங்கேற்றது. முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவர்களும் பரஸ்பரம் வணக்கம்கூறி பேசிக்கொண்டதைப் பற்றி விதந்தோதிப்பட்ட அளவுக்கு, அந்தக் கூட்டத்தின் தீர்மானங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. 

“ உச்ச நீதிமன்றம் பிப்.16-ல் வழங்கிய தீர்ப்பின்படி ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு அமைக்கவேண்டும் என வலியுறுத்தப்படும்” என்றும், ”நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதைவிட, தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி தண்ணீர் குறைவாக வழங்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் புதுத் தீர்ப்பு கூறியது பற்றி அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூறியபடி சட்ட வல்லுநர்களுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் இதை பிரதமருடன் நேரில் வலியுறுத்த தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் மோடியைச் சந்திப்பது என்றும் அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

தமிழகம் தன் நிலையில் கறாராக இருந்தால், காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்கவேண்டும் எனும் மத்திய அரசுக்கு கட்டாயம் ஏற்ட்டது. பிரதமரைச் சந்திக்க தமிழகக் குழுவினர் டெல்லிக்குச் செல்லவிருந்தநிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அரசுத் திட்டத்தைத் தொடங்கிவைக்க, கடந்த 24ஆம் தேதி பிரதமர் மோடி சென்னைக்கு வந்தார். அப்போது அவரிடம் முதலமைச்சர் தமிழகத்தின் கோரிக்கையை வலியுறுத்தும் மனுவை அளித்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகக் குழுவினரைச் சந்திக்க பிரதமர் அலுவலகம் நேரம் தரமறுத்துவிட்டது. 
அதற்குப் பதிலாக, காவிரி தொடர்புடைய 5 மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள், நீர்வளத் துறைச் செயலாளர்களை மத்திய நீர்வளத் துறைச் செயலாளர் டெல்லிக்கு அழைத்துப் பேசினார். கடந்த 9ஆம் தேதி நடந்த அக்கூட்டமானது, எந்த முடிவும் எடுக்கப்படாமல் தோல்வியில் முடிந்தது. 

அதிலும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல, மத்திய நீர்வளத் துறையின் செயலாளர் யு.பி.சிங், ” காவிரி மேலாண்மைவாரியமோ காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவோ அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறவில்லை. ’ஏதோ ஒரு செயல்திட்டம்’ அமைக்கும்படிதான் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது” என்று அதிர்ச்சியான விளக்கம் கொடுத்தார். 

இதற்கிடையில் சென்னைக்கு வந்த மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கடினமானது; அதன் காலக்கெடுவுக்குள் அமைப்பது சாத்தியமில்லை” எனச் சொன்னதும், தமிழகத்தில் பலத்த எதிர்ப்பையும் கண்டனங்களையும் கிளப்பியது. 

உச்ச நீதிமன்றம் அண்மையில் தந்த தீர்ப்பில், முன்னர் காவிரி நடுவர்மன்றம் கொடுத்ததில் 14.75 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்குக் குறைத்ததே, இங்கு விவசாயிகள் மத்தியில் கோபத்தையும் அதிருப்தியையும் அதிகரித்துள்ளது. மத்திய அரசும் அதிகாரிகளும் பொதுநிலையிலிருந்து விலகி, ஒருதலைப்பட்சமாக கர்நாடகத்துக்குச் சாதகமாக நடந்துகொண்டுவருகின்றனர். 

மத்திய செயலாளர் சொல்லும் ‘ஒரு செயல்திட்டம்’ என்பது பற்றி, காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பில், பக்கம் 216 முதல் 236வரையிலான 8ஆவது பகுதியில் மேலாண்மைவாரியம் அமைக்கப்படுவது குறித்து விளக்கப்பட்டுள்ளது.  அதைத்தான் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த வாரியம் அமைக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாநிலங்களும் இணைந்து பங்கீட்டைக் கண்காணிக்கமுடியும். எந்த ஒரு தரப்பும் மற்ற தரப்பை ஏமாற்றமுடியாது. 

காவிரி ” காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம், அதன்கீழ் நீர் அளவை முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்தால், உச்ச நீதிமன்றம் குறைத்து வழங்கியுள்ள 177.25 டி.எம்.சி. தண்ணீரும் தமிழ்நாட்டிற்குக் கிடைத்துவிடுமே என்று கவலைப்பட்டுள்ளது நரேந்திர மோடி அரசு! மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் கூறிய ’ஏதோ ஒரு செயல்திட்டம்’ என்பது கர்நாடக அரசு கூறிய விளக்கம்தான். தமிழ்நாட்டின் முதுகில் குத்திவிட்டது, மத்திய அரசு”எனச் சாடுகிறார், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன். 

’ஏதோ ஒரு செயல்திட்டம்’ எனும் உச்சநீதிமன்றத்தின் அண்மைய உத்தரவில் உள்ள ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு, காவிரி நீரைப் பகிர்ந்துகொள்ள புதிய வகையிலான எந்த குழுவை அமைத்தாலும், அது, இதுநாள்வரை விட்டுக்கொடுத்துக்கொண்டே வரும் தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் அப்பட்டமான அநீதியாகவே இருக்கும்! 


டிரெண்டிங் @ விகடன்