தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயல்சின்னம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலைக் கொண்டுள்ளது. இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ள 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கையின் தென்பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மாலத்தீவு அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனால் அடுத்த 3 நாள்களுக்கு மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கன்னியாகுமரி கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு இடையே நிலை கொண்டிருப்பதால் கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், கடல்பகுதியில் 45 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தென் தமிழகம், கன்னியாகுமரி, மாலத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் வரும் 15-ம் தேதி வரை,  2 நாள்ளுக்கு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு எச்சரிகை  விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் மற்றும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

   

ஏற்கெனவே, கடந்த 4 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் 3,500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆகியவை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் மேலும் 2 நாட்கள் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை மூலம் மீனவர் சங்கங்கள் வழியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக வெயிலே தெரியாமல் பலத்த காற்று  வீசியும், அவ்வப் போது மழையும் பெய்தும் வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!