வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (14/03/2018)

கடைசி தொடர்பு:10:55 (14/03/2018)

''இன்னைக்கு அம்மாவா இருக்கிறதுக்கு இவ்வளவு குவாலிஃபிகேஷன் வேணுமா?!'' ஓர் அம்மாவின் கடிதம்

ந்தக் காலத்தில் அம்மாவா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமாங்க? பாரதிதாசனின் 'குடும்ப விளக்கு' நாயகியும், 'இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை' என்கிற பழைய பாடலில் பட்டியலிடப்படும் வேலைகள் அத்தனையையும் செய்த பெண்களும், இந்தத் தலைமுறை அம்மாக்களின் ஒர்க்கிங் ஷெட்யூலைப் பார்த்தாங்கன்னா, அவங்க கண் வேர்த்துடும். 

அம்மா

நாம சின்னப்பிள்ளையா ஸ்கூலுக்குப் போயிட்டிருந்தப்போ, இட்லியில் பொடி, நல்லெண்ணெய்விட்டு, ஒரு புரட்டுப் புரட்டி டிபன் பாக்ஸ்ல கட்டி அனுப்பிடுவாங்க. ஆனால், இப்போ பிள்ளைகளுக்கு அப்படி சிம்பிளா லன்ச் கட்டிட முடியுமா? ஒரு நாள் சாண்ட்விச், மறுநாள் சைனீஸ் டிஷ், அடுத்த நாள் இத்தாலி என விதவிதமா பேக் பண்ண வேண்டியிருக்கு. டி.வி. விளம்பரங்களைப் பார்த்து லஞ்ச் கேட்கும் பிள்ளைகளைக் கோவிச்சுக்கவா முடியும்? அவங்க எக்ஸ்போசர் அப்படி. 

குக்

அடுத்து, ஸ்கூலுக்குப் போறது. நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ பக்கத்து வீட்டு அக்கா, எதிர்த்த வீட்டு ஃப்ரெண்டுனு நிறைய பொண்ணுங்களோட சேர்ந்து நடந்தே போயிடுவேன். இப்போ அப்படியா? நல்ல ஸ்கூல், பெரிய ஸ்கூல்னு ஆயிரத்தெட்டு எதிர்கால கவலையில், வீட்டுக்கும் பிள்ளைகள் படிக்கும் ஸ்கூலுக்கும் பக்கத்து ஊர் தொலைவு இருக்கு. அதனால, என் அம்மாவுக்கு என்னை ஸ்கூலில் விடறதுக்கு மாட்டுவண்டி ஓட்டத் தெரிஞ்சிருக்க வேண்டிய கட்டாயமில்லே. ஆனால், என் பிள்ளையை ஸ்கூல், மியூசிக் கிளாஸ் எனக் கூட்டிட்டுப்போக கட்டாயம் டூ வீலர் ஓட்டத் தெரிஞ்சே ஆகணும் எனக்கு. 

சி.பி.எஸ்.சி. ஸ்கூலில் சேர்த்தாதான் பிள்ளைங்க ஃபியூச்சர் நல்லா இருக்குமாம். ஓ.கே., சேர்த்தாச்சு. அங்கே பிள்ளைகளுக்கு ஹோம் ஒர்க் கொடுக்கிறாங்களோ இல்லையோ, அம்மாக்களுக்கு விதவிதமா புராஜெக்ட் ஒர்க் கொடுக்கிறாங்க. இன்டர்நெட்டை அக்குவேறா, ஆணி வேறா பிரிச்சு, யூனிக்கா புராஜெக்ட் பண்ணத் தெரியணும் இந்தக் கால அம்மாக்களுக்கு. 

பெற்றோர்

ஃபர்ஸ்ட் லாங்வேஜ், செகண்ட் லாங்வேஜ், தேர்ட் லாங்வேஜ்னு எங்களுக்கு மூணு மொழியாவது தெரிஞ்சிருக்கணும். பிரெஞ்ச், ஜெர்மனி எனப் பிள்ளைகள் ஃபாரின் லாங்வேஜ் படிக்க ஆரம்பிச்சாலோ எங்க ஜோலி ஓவர். நாங்களும் அதெல்லாம் கத்துக்கணும். இல்லன்னா, பிள்ளை படிக்குதா, புக்கை பிரிச்சு வெச்சுட்டு சும்மா இருக்கா எனக் கண்டுபிடிக்க முடியாது. 

பிளஸ் டூ படிக்கும் பிள்ளையா இருந்தால், நீட் எக்ஸாம், பெஸ்ட் கோச்சிங் கிளாஸ் என அலையணும். இதுக்கெல்லாம் நம்ம பிள்ளை ஃபிட்டாகாதுன்னு தெரிஞ்சாலோ, வேற என்ன படிக்கலாம்னு சொல்லத் தெரிகிற அளவுக்குக் கல்வியாளராகவும் நாம இருக்கணும். 

சக்ஸஸ்

இதையெல்லாம் தாண்டி, ஹஸ்பெண்டுக்கு ஒத்தாசையா வேலைக்குப் போகணும், மார்டனா இருக்கணும், ஸ்லிம்மா இருக்கணும். பொட்டு, பூ எனச் சில நேரம் மங்களகரமாகவும் இருக்கணும்; சில நேரம் ஜீன்ஸ், டீ ஷர்ட்னு மார்டனா கலக்கணும். புரொஃபஷனலா அட்வைஸ் பண்ற பி.ஏ.வா இருக்கணும்; வீட்டு வேலை பார்க்கும் ஆயாவாகவும் இருக்கணும். பிரேக்கிங் நியூஸ்ங்கிற நாட்டு நடப்பும் தெரியணும்; நாட்டு வைத்தியமும் தெரியணும். 

காலையில் கோழி கூப்பிட, ஸாரி... அலாரம் கூப்பிட எழுந்திரிச்சு, காபி, டிபன், லன்ச், மாமியார் மாமனாருக்குப் பத்திய சமையல்னு பரபரன்னு செய்யத் தெரியணும். அம்மியில் அரைக்கிற மீன் குழம்பும் தெரியணும்; ஐபோனில் இருக்கும் லேட்டஸ்ட் டெக்னாலஜியும் தெரியணும். இது எல்லாத்தையும் தாண்டி, எவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா இருந்தாலும் வலிக்கலியே என்கிற எஃபெக்ட்ல முகத்தை ஃப்ரெஷ்ஷா சிரிச்ச மாதிரியே வெச்சுக்கணும். இன்னைக்கு அம்மாவா இருக்கிறதுக்கு இவ்வளவு குவாலிஃபிகேஷன் வேணும் எங்களுக்கு...''

 


டிரெண்டிங் @ விகடன்