வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (14/03/2018)

கடைசி தொடர்பு:10:01 (14/03/2018)

'100 ஏக்கர் பந்தல்.. 300 ஏக்கர் பார்க்கிங்...!' தி.மு.கவின் கொங்கு ஸ்கெட்ச்

மாநாடு, conference

மார்ச் 24, 25 தேதியில் பிரமாண்ட மாநாடுக்காகத் தயாராகி வருகிறது தி.மு.க. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சரிவைக் கண்டது கொங்கு மண்டலத்தில். இன்று அந்த மண்டலத்தின் முக்கியப் பகுதியான ஈரோடு பெருந்துறையில்தான் தி.மு.க மாநாட்டை நடத்திக்காட்ட இருக்கிறது. 'கொங்கு மண்டலத்தில் சரிந்திருக்கும் செல்வாக்கை மீட்க முயல்கிறது தி.மு.க. அதனால்தான் இம்மாநாட்டை ஈரோட்டில் கூட்டுகிறது' போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இம்மாநாடு வெறும் கொங்கு மண்டலத்தைச் சரிகட்டுவதற்காக மட்டும் இருக்கப்போவதில்லை. 

erode

கடந்த சில மாதங்களாக தி.மு.க-வின் பலதரப்பட்ட உறுப்பினர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறார் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின். நிறைகளைவிட பல குறைகள் அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறது. இந்நிலையில், தி.மு.க-வின் உள்அடுக்குகளை வலுப்படுத்தும் ஓர் அங்கமாகவே இம்மாநாடும் அமையப் போகிறது. கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதியன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க பொதுச் செயலாளர் பேரா. அன்பழகன், மு.க.ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் நடந்த இக்கூட்டத்தில் மொத்தம் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது இந்த 'ஈரோடு மாநாடு'. “மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மார்ச் மாதம் 24, 25-ம் தேதிகளில் ஈரோட்டில் தி.மு.க மாநாடு நடத்தப்படும்”, என அறிவிக்கப்பட்டபோதே தி.மு.க தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். காரணம், வெளி முகாம்களின் தலைவர்கள் இல்லாமல் கட்சிக்காக, கட்சித் தொண்டர்களைப் பிரதானமாக முன்னிறுத்தி நடத்தப்படுகிறது இம்மாநாடு. 

erode

மாநாட்டு ஏற்பாடுகளை முன்னின்று கவனித்துவருபவர்களில் ஒருவரும், தி.மு.க-வின் ஈரோடு மாவட்டச் செயலாளருமான எஸ்.முத்துசாமியிடம் பேசினோம். “பெருந்துறை அருகேயுள்ள 'சரளை' என்ற பகுதியில்தான் மாநாடு நடக்க இருக்கிறது. 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் அமைக்க இருக்கிறோம். 5 லட்சம் தொண்டர்கள் வரை வருவார்கள். அவர்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. வித்தியாசமான செட்டிங்கில் மேடை அமைக்க இருக்கிறோம். ‘பந்தல்’ சிவா இந்த வேலைகளை கவனித்து வருகிறார். மேடையை ஜே.பி.கிருஷ்ணா அமைக்கிறார். வி.ஐ.பி நுழைவு வாயில், வாகனங்கள் நிறுத்துமிடம் என ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்துச் செய்கிறோம். dmk மொபைல் கழிப்பறைகள், குடிதண்ணீர், உணவு ஏற்பாடுகள் என அனைத்தும் செய்திருக்கிறோம்.  வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தங்குவதற்காக பெருந்துறையைச் சுற்றியுள்ள சுமார் 80 கல்யாண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 300 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு, காவல்துறை, சுகாதாரத்துறை என அரசிடம் முறையான அனுமதி பெற்றிருக்கிறோம். அனுமதி பெறுவதில்கூட எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. 'பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது' என செயல்தலைவர் கூறியிருக்கிறார். பேனர்கள், ஆர்ச்சுகள், கட்அவுட்டுகள் என எதுவும் வைக்கப்போவதில்லை. மாநாட்டுக்கு அடுத்தநாள் இலவசத் திருமணங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். மேலும், திராவிட இயக்க வரலாறுகளை எடுத்துரைக்கும் விதமாக சிறப்புக் கண்காட்சி தொடங்க இருக்கிறோம். மாநாட்டு ஏற்பாடுகளை வரும் 16-ம் தேதி பார்வையிட வரும் ஸ்டாலின் அவர்கள், இந்தக் கண்காட்சியையும் பார்க்கிறார். பெருந்துறையைச் சுற்றியுள்ள பல மாணவர்கள் இக்கண்காட்சியைப் பார்ப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளனர். சுமார் 1000 அரிய படங்களுக்கு மேல் அந்தக் கண்காட்சியில் இடம்பெற இருக்கிறது” என்றார். 

erode

மேலும், 'அரசியல் முன்னேற்பாடுகள், கூட்டணி, கொங்கு மண்டல தி.மு.க அரசியலில் இந்த மாநாடு ஏற்படுத்தப்போகும் தாக்கம்' தொடர்பாகப் பேசினோம். “இந்த மாநாடு தி.மு.க என்ற கட்சியின் தனிப்பட்ட மாநாடு மட்டுமே. இதில், இப்போதைக்கு தி.மு.க-வின் தலைவர்கள்தான் பங்கேற்க இருக்கிறார்கள். ஒருவகையில் கட்சியின் நன்மை கருதி இந்த மாநாடு நடக்க இருந்தாலும், பொதுமக்களுக்கான தேவைகள், சமூகப் பணிகள், அவர்களுக்காக முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் இந்த மாநாடு பேசும். மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் போன்றவைகளின் கருத்துகள் பிரதானப்படுத்தப்படும். பொதுமக்களின் முக்கியப் பிரச்னைகள் பற்றி அதிகமாகப் பேசப்படும். அதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அரசியலையும் மீறி சமூகத்துக்கான கருத்தை முன்னெடுக்கும் இந்த மாநாடு. மேலும், நீண்ட நாள்களுக்குப்பின் கட்சிக்கான மாநாடு ஈரோட்டில் நடக்கிறது. ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி என ஏழு மாவட்டத் தொண்டர்களும், அவர்களது முக்கியப் பிரதிநிதிகளும் உற்சாகமாகப் பணியாற்றி வருகிறார்கள். வரவேற்புக்குழு, 20 தனிப்பட்ட குழுக்கள், 15 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பரபரப்பாகச் சுழன்று வருகிறார்கள். இந்த உற்சாகம் மொத்த தி.மு.க தொண்டனுக்கும் போய்ச் சேரும். தி.மு.க-வின் உள்கட்டமைப்பில் பெரும் எழுச்சியை இம்மாநாடு ஏற்படுத்தும். 'வி.ஐ.பி-க்களுக்கு வழங்கப்படும் அதே உபசரிப்பு, மாநாட்டுக்கு வரும் ஒவ்வொரு தி.மு.க தொண்டனுக்கும் வழங்கப்பட வேண்டும்' எனக் கூறியிருக்கிறார் செயல்தலைவர். அது நடக்கும்” என உறுதியாக பேசி முடித்தார் எஸ்.முத்துசாமி. 

தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களின் 'பல்ஸ்' பிடிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். தன்னுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பர்களிடமும் கருத்துகள் கேட்கிறார். இரவு 11 மணிக்கும் அறிவாலயத்தில் கூட்டம் நடக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக தேனாம்பேட்டை 'ஆனந்தா' ஓட்டலில் வெளி மாவட்ட தி.மு.க கரை வேட்டியினரை அதிகமாகக் காணமுடிகிறது. 1949 ராயபுரம் 'ராபின்சன் பூங்கா' காலச் சக்கரம் மீண்டும் சுழலத் தொடங்கியிருக்கிறதுபோல!


டிரெண்டிங் @ விகடன்