வெளியிடப்பட்ட நேரம்: 00:15 (14/03/2018)

கடைசி தொடர்பு:19:00 (14/03/2018)

பேருந்து நிலையத்தில் இலவச வைஃபை..! திருநெல்வேலியில் அசத்தல் முயற்சி

கிராமப்புற விவசாயிகள், மாணவர்கள் ஆகியோர் இணையத்தை பயன்படுத்த ஏதுவாக வள்ளியூர் பேருந்து நிலையத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இலவச இணைய வசதி தொடங்கப்பட்டு உள்ளது. 

இலவச இணைய வசதி

நெல்லை மாநகரில் உள்ள பேருந்து நிலையத்தில் கூட இன்னும் இலவச இணையதள வசதி செய்து கொடுக்கப்படவில்லை. ஆனால், பெரும்பாலான கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இலவசமாக வைஃபை வசதி செய்து கொடுக்கப்பட்டு இருப்பது அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரான அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஐ.எஸ்.இன்பதுரையின் முயற்சியால் இந்த வசதியை அப்பகுதி மக்கள் பெற்றுள்ளனர்.

வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இலவச இணையதள சேவைக்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’தமிழகத்திலேயே முதல் முறையாக கிராமப் பகுதியைச் சேர்ந்த பேருந்து நிலையத்தில் வைஃபை வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவையின் மூலமாக விவசாயிகள், தங்களுக்குத் தேவையான வேளாண்மைத் தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் இணையதளங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

அத்துடன், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் கல்விக்குத் தேவையான தரவுகளையும் புத்தகங்களையும் இந்த இணைய சேவைக்கான வசதியைப் பயன்படுத்திப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த இணையதள வசதியானது சுமார் 300 மீட்டர் சுற்றளவுக்கு கிடைக்கும். ஒரே நேரத்தில் 500 பேர் வரையிலும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒரு நபர் 24 மணி நேரத்தில் 400 MB அளவுக்கு இணைய சேவையைப் பயன்படுத்த முடியும். 

இந்த இணையதள சேவையினை கிராமப் பகுதி மக்கள் எப்படி பயன்படுத்த முடியும் என்பது குறித்து தொடு திரைகள் மூலமாகவும் செயல் விளக்கம் மூலமாகவும் விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வசதி செய்துள்ளோம். அத்துடன் செயல்முறைகள் பற்றி திரையிட்டுக் காட்டவும் வசதி செய்துள்ளோம். அதனால் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுலபமாக இதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த சேவையின் வெற்றியைப் பொறுத்து அடுத்தகட்டமாக நெல்லை மாவட்டத்தின் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்போம்’’ என்று தெரிவித்தார்.